ADDED : நவ 29, 2024 10:04 PM

சம்பல்; உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டு உள்ளது.
உத்தரப்பிரதேசம் சம்பல் நகரில் உள்ள மசூதியில் கோர்ட் உத்தரவின் பேரில், தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த சென்றனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மசூதியில் ஏராளமானோர் திரண்டனர். இதனால் பதற்றம் அதிகரித்து, மோதல் மூண்டது. வன்முறை சம்பவங்களில் 5 பேர் பலியாக 30 போலீசார் காயம் அடைந்தனர்.
தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால் 24 மணிநேரமும் போலீசார் கட்டுப்பாட்டின் கீழ் சம்பல் நகரம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மசூதி தொடர்பான ஆய்வு விவகாரத்தில் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்தும், எந்த புதிய உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என்றும் சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.
இந் நிலையில், அங்கு பதற்றம் தணிந்த நிலையில், மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும் மேற்கொண்டு எவ்வித அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்கும் வண்ணம், கண்காணிப்பில் போலீசார் இறங்கி உள்ளனர்.