தசரா கொண்டாட்டத்தை ஒட்டி உ.பி.,யில் இன்டர்நெட் சேவை முடக்கம்
தசரா கொண்டாட்டத்தை ஒட்டி உ.பி.,யில் இன்டர்நெட் சேவை முடக்கம்
ADDED : அக் 03, 2025 03:34 AM

பரேலி: உத்தர பிரதேசத்தில் தசரா கொண்டாட்டத்தை ஒட்டி, பதற்றம் நிறைந்த பரேலி மாவட்டத்தில் இரு தினங்களுக்கு இணைய சேவையை நிறுத்தி வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உ.பி.,யின் கான்பூரை அடுத்த ராவத்பூரில், கடந்த மாத துவக்கத்தில் மிலாடி நபி கொண்டாட்டத்தின் போது, பல இடங்களில் 'ஐ லவ் முகமது' என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதற்கு ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
81 பேர் கைது இதையடுத்து, அடையாளம் தெரியாத 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரேலி மாவட்டத்தில் உள்ள கோட்வாலியில் போராட்டம் நடத்த, உள்ளூர் மதகுரு தவ்கீர் ரசா கான் அழைப்பு விடுத்தார்.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததை அடுத்து, போராட்டம் ரத்து செய்யப் பட்டது.
கடந்த மாதம் 26ம் தேதி, இதற்காக, திரண்ட 2,000க்கும் மேற்பட்டோர் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில், தவ்கீர் ரசா கான் உட்பட 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனால், கோட்வாலி உட்பட மாவட்டம் முழுதும் பதற்றம் நிறைந்துள்ளது. இந்நிலையில், தசரா கொண்டாட்டத்தை ஒட்டி பரேலி மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான, ஷாஜஹான்பூர், பிலிபித், புதாவுன் ஆகியவற்றில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உத்தரவு தசரா பூஜை, ராவணன் எரிப்பு நடக்கும் இடங்கள், ராம்லீலா மைதானம் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு மாவட்டங்களிலும் முக்கிய வீதிகளில் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை பறக்கவிட்டு பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், சந்தே கப்படும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும் பொதுமக்களை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அதிக பதற்றம் நிறைந்த பரேலி மாவட்டத்தில், சமூக ஊடகங்கள் வாயிலாக பரவும் பொய் செய்திகளை தடுக்க நாளை பிற்பகல் 3:00 மணி வரை இணையசேவையை துண்டிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும், மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்களின் எஸ்.எம்.எஸ்., எனப்படும் குறுஞ்செய்தி சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.