தொழில் துவங்க அனுமதிக்கு ஒற்றைச் சாளர முறை அறிமுகம்
தொழில் துவங்க அனுமதிக்கு ஒற்றைச் சாளர முறை அறிமுகம்
ADDED : செப் 28, 2024 07:33 PM
புதுடில்லி:டில்லியில் தொழில் துவங்குவதை எளிதாக்கும் வகையில், முதலீட்டாளர்களின் விண்ணப்பங்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்குவதற்கு ஒற்றைச் சாளர முறை அறிமுகம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, தொழில்துறை அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் கூறியதாவது:
ஒற்றைச் சாளர முறையின் 'பீட்டா' பதிப்பு இன்று அறிமுகம் செய்யப்படும். இந்த இயங்குதளம் முந்தைய அனுமதிகளை ஒழுங்குபடுத்துதல், கால விரையத்தை குறைத்தல், துறை சார்ந்த சீர்திருத்தங்களை மேம்படுத்துதல், டில்லியில் எளிதாக தொழில் துவங்குதல் மற்றும் வியாபாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொழில் துவங்குவதற்கான அனுமதியை விரைவாக வழங்கி, அரசுடன் தொழிலதிபர்களுக்கு நட்புச் சூழலை உருவாக்க இந்த இயங்குதளம் உதவும். தொழிலாளர் நலத்துறை, டில்லி மாநகராட்சி, டில்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், டில்லி குடிநீர் வாரியம், மின்நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 37 சேவைகள் இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில் ஒற்றை சாளர முறையில் இயங்குதளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கட்டுப்பாடு, வர்த்தகம், வரி, கலால், கேளிக்கை மற்றும் ஆடம்பர வரி உள்ளிட்ட சேவைகளும் இணைக்கப்பட்டன.
ஒற்றைச் சாளர வசதியில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆவணங்களை நிரப்பவும், பதிவேற்றம் செய்யவும் மற்றும் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கவும், கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும் முடியும். அனுமதி மற்றும் பதிவுச் சான்றிதழை இணையதளம் வழியாகவே பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.