ADDED : பிப் 21, 2024 06:49 AM

பெங்களூரு : ஐ.பி.எஸ்., பிரதாப் ரெட்டியின் ராஜினாமாவை கர்நாடகா அரசு ஏற்றுக்கொண்டது. ஏப்ரல் 30ம் தேதி பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
கர்நாடகாவில் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு, டி.ஜி.பி.,யாக பணியாற்றியவர் பிரதாப் ரெட்டி. ஆந்திராவின் குண்டூரை சேர்ந்த அவர் 1991ம் ஆண்டு, ஐ.பி.எஸ்., குழுவை சேர்ந்தவர். ஜூன் 30ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார்.
சில தினங்களுக்கு முன்பு, கர்நாடகா அரசுக்கு, பிரதாப் ரெட்டி எழுதிய ராஜினாமா கடிதத்தில், 'பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதாகவும், ஏப்ரல் 30ம் தேதி என்னை விடுவிக்க வேண்டும்' என்றும் கூறியிருந்தார்.
டி.ஜி.பி., அலோக் மோகன் மீதான அதிருப்தியால், பிரதாப் ரெட்டி ராஜினாமா செய்வதாக, தகவல் வெளியானது. ஆனால் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் மறுத்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பிரதாப் ரெட்டி, ராஜினாமா செய்வதாக கூறி இருந்தார்.
இந்நிலையில் பிரதாப் ரெட்டியின் ராஜினாமா கடிதத்தை கர்நாடகா அரசு நேற்று ஏற்றுக்கொண்டது. அவரை ஏப்ரல் 30ம் தேதி, பணியில் இருந்து விடுவிக்கவும், உத்தரவு பிறப்பித்துள்ளது.

