ஈரான் போரால் அமெரிக்காவுக்கு ரூ.32,000 கோடி இழப்பு
ஈரான் போரால் அமெரிக்காவுக்கு ரூ.32,000 கோடி இழப்பு
UPDATED : அக் 07, 2026 08:28 PM
ADDED : அக் 07, 2026 07:44 PM
வாஷிங்டன்: 'ஈரானுடனான போரில் அமெரிக்கா குறைந்தது, 81 ராணுவ விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை இழந்துவிட்டது. இதன் மொத்த மதிப்பு 31,680 கோடி ரூபாய்' என அமெரிக்க அரசு நிறுவனமான 'காங்கிரஷனல் ரிசர்ச் சர்வீஸ்' தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போரை தொடங்கின. இதற்கு ஈரானும் தீவிரமான பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், இப்போரில் அமெரிக்க ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ள விமானங்களின் இழப்பு மற்றும் சேதம் குறித்த புதிய அறிக்கையை அந்நாட்டு அரசு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
போரின் போது எதிரிகளை தாக்கி கண்காணிக்கும், 'எம்.க்யூ.-, - 9' ரீப்பர் ரகத்தை சேர்ந்த, 45 ட்ரோன்களை இழந்துள்ளோம். இது, அமெரிக்க விமானப்படையின் கண்காணிப்புப் பிரிவை கடுமையாக பாதித்துள்ளது.
'எப்15' ரகத்தை சேர்ந்த, 12 போர் விமானங்கள், எதிரியின் ரேடார்களில் சிக்காமல் மறைந்து தாக்கும் அதிநவீன 'எப்35' ரக போர் விமானம் ஆகியவற்றையும் இழந்துள்ளோம். 'இ-3 சென்ட்ரி' ரக வான்வழி கண்காணிப்பு விமானம் ஒன்று மற்றும் போர் தேடல் மற்றும் மீட்பு ஹெலிகாப்டர் உள்ளிட்டவையும் சேதமடைந்துள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒரு 'எப்-15' போர் விமானத்தின் மதிப்பு, 288 கோடி ரூபாயாகவும், 'எம்.க்யூ., - -9' ரீப்பர் ரக ட்ரோன் ஒன்றின் மதிப்பு, 480 கோடி ரூபாயாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிநவீன 'எப்-35' விமானத்தின் மதிப்பு, 883 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். இதன்படி, ஒட்டுமொத்தமாக அமெரிக்கா இழந்துள்ள ராணுவ விமானங்கள் மற்றும் ட்ரோன்களின் இழப்பீடு மற்றும் சேத மதிப்பு கிட்டதட்ட, 31,680 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
