ADDED : ஜூன் 29, 2025 01:53 AM

மூணாறு: கேரள மாநிலம் மூணாறு அருகில் உள்ள இரவிகுளம், நாட்டின் சிறந்த தேசிய பூங்காவாக தேர்வு செய்யப்பட்டது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சார்பிலான நிபுணர் குழு, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் 2020 - 25 வரை ஆய்வு நடத்தினர். நாட்டில் உள்ள 438 இடங்களில், பல கட்டங்களாக ஆய்வு நடந்தன.
அதில், மூணாறு வன உயிரின பிரிவுக்கு கீழ் உள்ள இரவிகுளம் தேசிய பூங்கா, ஜம்மு - காஷ்மீரில் உள்ள டாச்சிகம் தேசிய பூங்கா ஆகியவை, தலா 92.97 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று சிறந்த தேசிய பூங்காக்களாக தேர்வு செய்யப்பட்டன.
'இன்டர்நேஷனல் யூனியன் பார் கன்சர்வேஷன் ஆப் நேச்சர், வேர்ல்டு கமிஷன் ஆன் புரொடெக்டட் ஏரியா' ஆகிய அமைப்புகளின் விதிகளுக்கு உட்பட்டு, ஆறு முக்கிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், 32 தரவுகளில் மதிப்பீடு நடந்தது.
மேற்கு தொடர்ச்சி மலைகளின் தெற்கு மலைகளில், இரவிகுளம் தேசிய பூங்கா 97 சதுர கி.மீ., பரப்பளவை கொண்டது. உலகில் அதிக எண்ணிக்கையில் வரையாடுகள் உள்ள பகுதியான இரவிகுளம் தேசிய பூங்கா, உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் சுற்றுச்சூழல் சுற்றுலாவில் முன்மாதிரியாக உள்ளது.
இரவிகுளம், 1975 மே 31ல் வனவிலங்கு சரணாலயமாகவும்; 1978ல் மாநிலத்தில் முதல் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கப்பட்டது.
தற்போது, பூங்காவின் 50ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்திற்கு வனத்துறை தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.