ஐ.ஆர்.சி.டி.சி., முறைகேடு வழக்கு: லாலு மீதான விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
ஐ.ஆர்.சி.டி.சி., முறைகேடு வழக்கு: லாலு மீதான விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
ADDED : ஜன 06, 2026 12:23 AM

ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இரண்டு ஹோட்டல்களை, தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்டதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், 77, மீதான விசாரணைக்கு தடை விதிக்க டில்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 2004 - 09 வரை, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நிலத்தை லஞ்சமாக பெற்றதாக அவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக மத்திய விசாரணை அமைப்புகள் வி சாரித்து வருகின்றன.
இந்த கால கட்டத்தில், ஒடிஷாவின் புரி மற்றும் ஜார்க்கண்டின் ராஞ்சியில், ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு சொந்தமான இரண்டு ஹோட்டல்கள், பீஹாரைச் சேர்ந்த சுஜாதா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டன. இதில் முறைகேடு நடந்ததாக, அமலாக்கத் துறை, சி.பி.ஐ., தனித்தனியாக வழக்குப் பதிந்துள்ளன.
இந்த வழக்கு டில்லியில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், லாலு பிரசாத், அவரது மனைவி ரப்ரி தேவி, அவரது மகன் தேஜஸ்வி யாதவ் உட்பட 11 பேர் மீது, கடந்த அக்., 13ல், சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதை நீதிமன்றமும் ஏற்றது.
இந்நிலையில், விசாரணை நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் லாலு பிரசாத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை நேற்று விசாரித்த நீதிபதி ஸ்வர்ணா காந்தா சர்மா பிறப்பித்த உத்தரவு:
சி.பி . ஐ.,யின் பதிலை கேட்காமல், விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. இதில் பதிலளிக்க சி.பி.ஐ.,-க்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. வரும் 14க்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை விசாரணை நீதிமன்றம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப் பட்டிருந்தது.
- டில்லி சிறப்பு நிருபர் -

