ரவுடிகளை பாதுகாக்கிறதா பா.ஜ.,? சட்டசபையில் கெஜ்ரிவால் கேள்வி
ரவுடிகளை பாதுகாக்கிறதா பா.ஜ.,? சட்டசபையில் கெஜ்ரிவால் கேள்வி
ADDED : நவ 29, 2024 10:19 PM

புதுடில்லி:“தலைநகர் டில்லியை ரவுடிகள்தான் இயக்குகின்றனர்,”என, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
டில்லி சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. கெஜ்ரிவால் மீது சரமாரியாக குற்றச்சாட்டு கூறிய, எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தாவை வெளியேற்ற சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் உத்தரவிட்டார். இதையடுத்து, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களும் வெளியேறினர்.
அதைத் தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
டில்லியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால், டில்லி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது. மாநகரில் தினமும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. ரவுடிகள்தான் டில்லியை இயக்குகின்றனர்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கின்றனர். பணம் தாராதார்களின் கடைகள் அல்லது வணிக நிறுவனங்களை சேதப்படுத்துகின்றனர். சில நிறுவனங்கள் மீது வெடிகுண்டும் வீசப்பட்டுள்ளது.
தாதா லாரன்ஸ் பிஷ்னோ பா.ஜ.,வால் பாதுகாக்கப்படுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர் தன் கும்பலை பயன்படுத்தி தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதை தங்குதடையின்றி செய்து வருகிறார். இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன் பொறுப்புகளை புறக்கணிக்கிறார். போலீஸ் மீது டில்லி மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். இனியாவது, அமித் ஷா விழித்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ., வெளிநடப்பு
சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், விதிமுறை 280ன் கீழ் எழுப்பப்படும் பிரச்னைகளை பட்டியலிடப்பட்ட உறுப்பினர்களால் படிக்கப்படும் என அறிவித்தார். இதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தலைமையிலான பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். பின், சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சபைக்கு வெளியே, விஜேந்தர் குப்தா கூறியதாவது:
சபையில் எம்.எல்.ஏ.,க்களூக்கு கேள்வி நேரம் இல்லை. எதிர்க்கட்சிகளின் குரலை ஆம் ஆத்மி அரசு நசுக்குகிறது. முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்களாவுக்கு ஆடம்பரச் செலவுகள், ரோஹிங்கியாக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்குதல், வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர்களைச் சேர்ப்பது உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்கள் குறித்து பேச திட்டமிட்டு இருந்தோம்.
ஆம் ஆத்மி கட்சி தனது பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிறது. இந்த ஆண்டில் நடந்த சட்டசபை கூட்டத்திலுமே கேள்வி நேரம் அனுமதிக்கவில்லை. இது, எம்.எல்.ஏ.,க்களின் அரசியலமைப்பு உரிமைகளை பறிக்கும் செயல். குறுகிய கால விவாதம் மற்றும் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அனுமதி கேட்டும் அவற்றை சபாநாயகர் நிராகரித்து விட்டார். வரும் தேர்தலில் டில்லி மக்கள் ஆம் ஆத்மிக்கு தகுந்த பாடம் கற்பிப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.

