நீதிமன்றமா... அரசியல் மன்றமா… : மம்தா ராஜினாமா கோரிய வக்கீலை கண்டித்த உச்சநீதிமன்றம்
நீதிமன்றமா... அரசியல் மன்றமா… : மம்தா ராஜினாமா கோரிய வக்கீலை கண்டித்த உச்சநீதிமன்றம்
ADDED : செப் 17, 2024 08:15 PM

புதுடில்லி: மேற்கு வங்க முதல்வர் ராஜினாமா செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், இது அரசியல் மன்றம் அல்ல என கருத்து தெரிவித்து உள்ளது.
கோல்கட்டாவில் இளம் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல்வர் மம்தா பதவி விலக உத்தரவிட வேண்டும் எனக்கூறி வக்கீல் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜேபிபர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சந்திரசூட் கூறியதாவது: அரசியல் தொடர்பான வாதங்களை வைக்க நீதிமன்றம் சரியான இடம் அல்ல. இது அரசியல் மன்றம் அல்ல. எங்களின் கருத்துக்கு உங்களின் ஒப்புதல் தேவையில்லை. நீங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஆக வேண்டும். உங்களின் அரசியல் செயல்பாடு குறித்து பார்க்க நாங்கள் இங்கு இல்லை. டாக்டர்களின் குறிப்பிட்ட பிரச்னைகளை பற்றி கையாண்டு வருகிறோம். முதல்வரை பதவி விலக உத்தரவிட வேண்டும் என நீங்கள் வலியுறுத்தினால், அது எங்களின் வேலை அல்ல. இவ்வாறு கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.
அப்போது மனுதாரர், தனது வாதங்களை முன்வைத்தார். இதனையடுத்து, சந்திரசூட் குறுக்கிட்டு, நாங்கள் சொல்வதை முதலில் கேட்க வேண்டும். அல்லது நீதிமன்றத்தை விட்டு வெளியேற்ற உத்தரவிட வேண்டி வரும் என எச்சரித்தார்.