சோயாபீன் இறக்குமதி பிரேசிலுக்கு மாற்றம்: சீனா முடிவால் அமெரிக்க விவசாயிகள் கவலை
சோயாபீன் இறக்குமதி பிரேசிலுக்கு மாற்றம்: சீனா முடிவால் அமெரிக்க விவசாயிகள் கவலை
UPDATED : ஆக 23, 2025 01:29 AM
ADDED : ஆக 23, 2025 12:58 AM

வாஷிங்டன்: சோயாபீன் வர்த்தகத்தை அமெரிக்காவிடம் இருந்து பிரேசிலுக்கு, சீனா மாற்றியது குறித்து அமெரிக்க விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்; விரைவில் இதற்கு தீர்வு காணும்படி விவசாயிகள் கூட்டமைப்பு, அதிபர் டிரம்புக்கு அழுத்தம் தர துவங்கியுள்ளது.
அமெரிக்கா - சீனா இடையே தொடர்ச்சியாக வர்த்தக போர் நடக்கிறது. இதனால், பரஸ்பரம் இறக்குமதி பொருட் களுக்கு அதிக வரி விதித்துள்ளனர். அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு குறிப்பாக சோயாபீன்களுக்கு, சீனா அதிக வரியை விதித்துள்ளது.
பெரும் பாதிப்பு இதனால் தென் அமெரிக்க நாடுகளின் சோயாபீன்களைக் காட்டிலும் அமெரிக்க சோயாபீன் விலை சீன இறக்குமதியாளர்களுக்கு மிகவும் விலை உயர்ந்ததாகிவிட்டது.
இதையடுத்து, நடப்பாண்டின் முதல் ஏழு மாதங்களில், சீனா இறக்குமதி செய்த சோயா பீனி ல் சுமார் 70 சதவீதம் பிரேசிலில் இருந்து வந்துள்ளது. இது அமெரிக்க விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு காலத்தில், சீன சந்தையில் 4 சதவீதமாக இருந்த அமெரிக்காவின் பங்கு தற்போது வெகுவாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
சந்தைப்பங்கு குறைந்ததால், அமெரிக்க சோயாபீன் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும் கொள்முதல் விலை குறைந்து உள்ளது.
இதனால் விவசாயிகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர்.
டிரம்புக்கு கடிதம் அமெரிக்க சோயாபீன் கூட்டமைப்பு, தங்களின் மிகப்பெரிய வாடிக்கையாளரான சீனா உடனான நீண்டகால வர்த்தகப் போரை தாங்க முடியாது என்றும், விரைவில் இதை முடிவுக்கு கொண்டு வருமாறும் டிரம்புக்கு கடிதம் எழுதிஉள்ளது.
தரவுகளின்படி, கடந்த ஜூலையில் சீனாவில் அமெரிக்க சோயாபீன் இறக்குமதி 4.21 லட்சம் டன்னாக இருந்தது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 11.47 சதவீதம் குறைவு.
ஜூலையில் மட்டும், சீனாவில் சோயாபீன் இறக்குமதி கடந்த ஆண்டைக்காட்டிலும் கிட்டத்தட்ட 19 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதில் 90 சதவீதத்தை பிரேசில் சப்ளை செய்துள்ளதாக சீன சுங்க நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.