முடிவுக்கு வருகிறதா ராஜஸ்தான் காங்., பூசல்?: அசோக் கெலாட் - பைலட் திடீர் சந்திப்பு
முடிவுக்கு வருகிறதா ராஜஸ்தான் காங்., பூசல்?: அசோக் கெலாட் - பைலட் திடீர் சந்திப்பு
ADDED : ஜூன் 09, 2025 12:59 AM

ராஜஸ்தான் காங்கிரசில் நீடித்து வந்த மோதலுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அக்கட்சியின் பொதுச் செயலர் சச்சின் பைலட், முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டை சந்தித்து பேசினார்.
கடந்த 2018ல், ராஜஸ்தானில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அந்த நேரத்தில் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த சச்சின் பைலட், கட்சியின் மறுமலர்ச்சி மற்றும் தேர்தல் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது கட்சி தலைமையின் பாராட்டைப் பெற்றது.
அவர்தான் முதல்வராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீனியரான அசோக் கெலாட்டை முதல்வராக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. சச்சின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். இது சச்சின் மற்றும் கெலாட் இடையே மோதலை உருவாக்கியது. இருவருக்கும் இடையே நடந்த பனிப்போர், 2020ல் பகிரங்கமாக வெடித்தது.
வலியுறுத்தல்
கெலாட்டின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய சச்சின், 'இளைய தலைமுறைகளின் வாய்ப்பை திறமையற்ற கெலாட் தட்டி பறிக்கிறார்' என, குற்றஞ்சாட்டினார். அப்போது 18 எம்.எல்.ஏ.,க்கள் சச்சினுக்கு ஆதரவு தெரிவத்தனர். இது இருவருக்கும் இடையிலான பிளவை அதிகப்படுத்தியது. இதையடுத்து, இருவரும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்தனர்.
கட்சி நிகழ்வுகளில் கூட்டாக தோன்றுவதையும் தவிர்த்து வந்தனர். இரு தரப்பினருக்கும் இடையிலான மோதலால், 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.
இதையடுத்து, இருவரும் பகையை மறந்து ஒன்றாக செயல்பட வேண்டும் என காங்.,கின் முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல் உட்பட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பின் இருவரும் மீண்டும் சந்தித்துள்ளனர். ஜெய்ப்பூரில் உள்ள கெலாட்டின் வீட்டுக்கு, சச்சின் பைலட் நேற்று முன்தினம் சென்றார். முன்னாள் மத்திய அமைச்சரும், தன் தந்தையுமான ராஜேஷ் பைலட்டின் 25வது நினைவு நாள் நிகழ்ச்சி, ஜெய்ப்பூரின் தவுசாவில் விரைவில் நடக்கவிருக்கிறது. இதற்கு அழைப்பு விடுக்கவே, கெலாட் வீட்டுக்கு பைலட் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ்ச்சி
இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட கெலாட், சச்சின் பைலட்டிடம் நட்பு பாராட்டும் விதமாக பேசியதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சந்திப்பின் போது, அரசியல் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின் வாயிலாக காங்கிரசில் ஐந்து ஆண்டுகளாக நீடித்து வந்த உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்துள்ளது, கெலாட் - சச்சின் ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

