ஈ.டி., நோட்டீஸ் உள்நோக்கமா? அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கருத்து
ஈ.டி., நோட்டீஸ் உள்நோக்கமா? அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கருத்து
ADDED : ஜன 28, 2025 06:29 AM

பெங்களூரு : “அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை, அரசியல் உள்நோக்கம் கொண்டதாக கருத முடியாது. சம்மனுக்கு முதல்வர் சித்தராமையாவின் மனைவி பதில் அளிக்க வேண்டும்,” என, மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: அனைத்து நேரங்களிலும், அமலாக்கத்துறையினர் சம்மனை, அரசியல் நோக்கம் கொண்டதாகக் கூற முடியாது. சம்மன் அனுப்புவது புதிய விஷயம் அல்ல. இதை நாம் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது.
அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது. இதற்கு பார்வதி சித்தராமையா பதில் அளிக்க வேண்டும். சித்தராமையா ஐந்து ஆண்டுகள் முதல்வராக நீடிப்பார் என, அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியுள்ளார்.
இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? நான் கட்சி மேலிடம் இல்லை. அவரவர் பதவியில் உள்ளனர்.
எங்களின் கோரிக்கையை அவ்வப்போது மேலிடத்திடம் கூற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு முறை கூறினால் போதும். பல முறை கூறினால் மேலிடத்துக்கு தர்மசங்கடம் ஏற்படும்.
தற்போது முதல்வர் பதவி குறித்து, நாங்கள் விவாதிக்கவில்லை. இதனால் பயனேதும் இல்லை. தேவையற்ற விவாதம் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.