பாக்., ரயில் கடத்தல் சம்பவம் இந்தியா மீது பழி சொல்வதா?
பாக்., ரயில் கடத்தல் சம்பவம் இந்தியா மீது பழி சொல்வதா?
ADDED : மார் 15, 2025 11:36 PM

உடுப்பி: ''பாகிஸ்தானில் ரயில் கடத்தல் சம்பவத்திற்கு, இந்தியா மீது பழி சொல்வதா?'' என, மத்திய உணவு அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கோபம் அடைந்துள்ளார்.
உடுப்பியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ரூபாய் சின்னத்தை வடிவமைத்தவர் தமிழர் என்பதில், தி.மு.க.,வுக்கு பெருமை இல்லையா? மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது ரூபாய் சின்னம் உருவாக்கப்பட்டது. சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். ராஜா, தயாநிதி அமைச்சர்களாக இருந்தனர். சின்னத்தை மாற்றி இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
தங்கள் அற்ப அரசியல், அரசின் தோல்வியை மறைக்க இதுபோன்று செய்கின்றனர். மும்மொழி கொள்கை வேண்டும் என்று நாங்கள் கூறினோம். ஹிந்தி மொழியும் இருக்க வேண்டும் என்று, நாங்கள் கூறினோமா. பொய் சொல்லி மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம்.
பாகிஸ்தானில் ஆட்சி முறை சீர்குலைந்துள்ளது. அங்கு ரயில் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு இந்தியாவை குறை சொல்வது சிறுபிள்ளைத்தனமானது. பாகிஸ்தான் குற்றச்சாட்டுகளுக்கு நம் வெளியுறவு அமைச்சகம் பதில் கொடுத்துள்ளது.
தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய, நடிகை ரன்யா ராவுக்கு அரசு அதிகாரிகள் பாதுகாப்பு அளிக்கின்றனர். இவ்வழக்கில் அமைச்சர்கள் பெயரும் அடிபடுகிறது. ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை.
இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக் கொண்டு, சி.பி.ஐ., விசாரணைக்கு கொடுக்க வேண்டும். கடத்தப்படும் பணம், தங்கம் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்த வாய்ப்பு அதிகம்.
இவ்வாறு அவர் கூறினார்.