UPDATED : ஜன 30, 2026 06:12 AM
ADDED : ஜன 30, 2026 12:42 AM

ஷில்லாங்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில், மேற்கு கரோ மலை மாவட்ட மக்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஒட்டப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாத சுவரொட்டி களால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேகாலயாவில், முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில், தேசிய மக்கள் கட்சி, பா.ஜ., - ஐக்கிய ஜனநாயக கட்சிகள் அடங்கிய மேகாலயா ஜனநாயக கூட்டணி அரசு நடக்கிறது. இம்மாநிலத்தின் மேற்கு கரோ மலை மாவட்டத்தில் உள்ள துரா, புபாரி, ராஜபலா, டிக்ரிகில்லா, செஸ்லா, கரோபதா மற்றும் துரிசோரி உள்ளிட்ட பகுதிகளில், கரோ சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், 'கரோ சமூகத்தினர், 2027க்குள் தங்களது வசி ப்பிடத்தை காலி செய்யாவிட்டால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, ஆங்கிலத்தில் மிரட்டல் விடுத்து, மலை மாவட்டம் முழுதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. இதனால், கரோ சமூகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மிரட்டல் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அமினுர் இஸ்லாம் என்ற நபரின் பெயர் தாங்கி, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு சார்பில் இந்த மிரட்டல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. உண்மையிலேயே இதை ஒட்டியது ஐ.எஸ்., தானா அல்லது மக்களை அச்சுறுத்த வேறு யாரேனும் ஐ.எஸ்., பெயரில் இந்த சுவரொட்டிகளை ஒட்டினரா என தெரியவில்லை. விரிவாக விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மாநில அமைச்சர் மார்க்கிஸ் மராக் கூறுகையில், ''மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையிலும் விடுக்கப்படும் இத்தகைய மிரட்டல்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.
சமீபத்தில் இந்த மாவட்டத்தில், இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் அடித்துக் கொல்லப்பட்டார். அதே போல், ராஜபலா பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத கல் குவாரியில் ஆய்வு நடத்தச் சென்ற, கரோ பழங்குடியின அமைப்பின் முக்கிய தலைவர் தில்செங் சங்மா மீது, ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து, ஐ.எஸ்., பெயரில் மிரட்டல் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டுள்ளன. தற்போது, பதற்றமான பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

