UPDATED : அக் 15, 2026 06:18 PM
ADDED : அக் 15, 2026 06:14 PM
பாரிஸ்: `பிளைதுபாய்' கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு செல்லும், `ஏர் பிரான்ஸ்' விமானங்களில் பாகிஸ்தான் விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து மற்றொரு மேற்காசிய நாடான இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற எமிரேட்சின் ‘பிளை துபாய்’ விமானத்தை கடத்தி மோத வைக்கும் முயற்சி சமீபத்தில் நடந்தது.
இதையடுத்து, இஸ்ரேலுக்கு வரும் விமானங்களில் பணியாற்றும் விமானிகள் மற்றும் பணியாளர்கள் இஸ்ரேலுடன் அதிகாரப்பூர்வ துாதரக உறவுகள் இல்லாத நாடுகளின் குடியுரிமையையோ அல்லது இரட்டை குடியுரிமையையோ கொண்டிருக்கக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் புதிய கட்டுப்பாடுகளின் கீழ் வரும் 31 நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று.
இக்கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு இயக்கப்படும் விமானங்களில், பாகிஸ்தான் விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் பணியாற்ற, ஐரோப்பிய நாடான பிரான்சைச் சேர்ந்த, ஏர் பிரான்ஸ் நிறுவனம் தடை விதித்துள்ளது.
அமெரிக்க நிறுவனமான, `யுனைடெட் ஏர்லைன்ஸ்' மற்றும் செக் விமான நிறுவனமான `ஸ்மார்ட்விங்க்ஸ்' ஆகியவையும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
