ADDED : ஜன 07, 2024 02:03 AM

பெங்களூரு, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்து சாதனை படைத்த, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், சூரியனை ஆய்வு செய்யும் தன் அடுத்த முயற்சியிலும் வெற்றியை பெற்றுள்ளது. திட்டமிட்டபடி கடைசி சுற்றுப் பாதையில், ஆதித்யா விண்கலத்தை நேற்று நிலைநிறுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
விண்வெளி துறையில், நம் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது. கடந்தாண்டு ஜூலை 14ல், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் - 3 விண்கலம் செலுத்தப்பட்டது.
இது, ஆக., 23ல் நிலவின் தென் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி, ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது. நிலவின் தென் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமை நமக்கு கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஆதித்யா - எல் 1 விண்கலம் செலுத்தும் திட்டத்தை இஸ்ரோ கையில் எடுத்தது.
முக்கிய காரணம்
கடந்தாண்டு செப்., 2ல், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., சி - 57 ராக்கெட் வாயிலாக, ஆதித்யா விண்கலம் செலுத்தப்பட்டது.
மொத்தம், 63 நிமிடங்கள், 20 வினாடிகளில், புவி வட்டப் பாதையில் அது நிலை நிறுத்தப்பட்டது.
பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள, எல் - 1 எனப்படும், 'லாக்ராஞ்ஜியன் பாயின்ட்' எனப்படும் இடத்தை நோக்கி இந்த விண்கலம் பயணத்தை மேற்கொண்டது.
இதுதான், பூமிக்கும், சூரியனுக்கும் இடையே ஈர்ப்பு விசை இல்லாத பகுதியாகும்.
இதனால், அங்கேயே நிலையாக நின்று, சூரியனை ஆய்வு செய்ய முடியும்.
விண்வெளியின் மிகப் பெரிய நட்சத்திரமான சூரியனை சுற்றி வந்தாலும், ஒரே இடத்தில் இருந்து ஆய்வு செய்ய முடியும் என்பதால், இந்த இடத்தை, நம் விஞ்ஞானிகள் தேர்வு செய்தனர்.
கிரகணங்கள் ஏற்பட்டாலும், ஆய்வு பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும், எவ்வித இடையூறும் இல்லாமல், தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய வேண்டும் என்பது, இந்த இடத்தை விஞ்ஞானிகள் தேர்வு செய்ததற்கு முக்கிய காரணமாகும்.
பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள தொலைவில், ௧ சதவீதமான இந்த இடத்தை, ஆதித்யா விண்கலம் நேற்று வெற்றிகர மாக அடைந்தது. தன் பயணத்தின் கடைசி சுற்றுப் பாதையான இங்கு நிலை நின்று, சூரியன் குறித்த புதுப்புது தகவல்களை ஆதித்யா அனுப்ப உள்ளது.
கடந்தாண்டு நிலவில் தரையிறங்கி சாதனை படைத்த இஸ்ரோ, தற்போது சூரியனை ஆய்வு செய்யும் சாதனையைப் படைத்துள்ளது.
இஸ்ரோவின் இந்த சாதனை தொடர்பான தகவலை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார்.
புதிய சாதனைகள்
இது தொடர்பாக வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
இந்தியா மற்றுமொரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவின் சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்கலமான ஆதித்யா, தன் இலக்கை எட்டியுள்ளது.
மிகவும் சிக்கலான விண்வெளி பயணத்தை சாத்தியமாக்கிய, தடையில்லா அர்ப்பணிப்புடன் கூடிய நம் விஞ்ஞானிகளின் திறமைக்கு கிடைத்துள்ள வெற்றியாகும்.
இந்த அசாத்திய சாதனையை படைத்ததற்காக நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுவதில் பெருமைப்படுகிறேன். மனிதகுலத்துக்கு பயன்படும் வகையில் அறிவியலில் பல புதிய சாதனைகளை நோக்கி நாம் பயணப்படுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விண்வெளித் துறையை கவனிக்கும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் இந்த சாதனைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.