நாளை முதல் பெலகாவியில் சட்டசபை தொடர் 10 நாட்களும் ரணகளமாவது உறுதி
நாளை முதல் பெலகாவியில் சட்டசபை தொடர் 10 நாட்களும் ரணகளமாவது உறுதி
ADDED : டிச 07, 2024 11:11 PM

பெலகாவி: பெலகாவியில் நாளை முதல் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடக்க இருக்கிறது. இடைத்தேர்தல் வெற்றியில் உற்சாகத்தில் இருக்கும் ஆளுங்கட்சியினரை பத்து நாட்களுக்கு சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் ரணகளப்படுத்த எதிர்க்கட்சியினரும் போராட்டக்காரர்களும் தயாராகி வருகின்றனர்.
கர்நாடகாவில் வட மாவட்ட மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் வகையில், பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் பத்து நாட்கள் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரில் ஆளுங்கட்சியை திணறடிக்க, பா.ஜ., - ம.ஜ.த., உறுப்பினர்கள் தயாராகி உள்ளனர்.
திட்டம்
முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி மீதான 'முடா' முறைகேடு வழக்கு; வால்மீகி ஆணையம் முறைகேடு; பல்லாரி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியர் இறப்பு; வக்பு ஆணைய நோட்டீஸ் என பல விஷயங்களை கையில் எடுக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, 1,000 டிராக்டர்களில், சுவர்ண விதான் சவுதாவை முற்றுகையிடுவோம் என, பஞ்சமசாலி சமுதாயத்தினர் எச்சரித்துள்ளனர்.
இதுபோன்று விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள், அமைப்பினர் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.
இதன் மூலம், சட்டசபை, மேலவைக்கு உள்ளேயும்; வெளியேயும், நாளை முதல் பத்து நாட்களுக்கு மாநில அரசை 'ரணகளமாக்கும்' நடவடிக்கை துவங்கி உள்ளன.
இடைத்தேர்தல் வெற்றி மகிழ்ச்சியில் உள்ள ஆளுங் காங்கிரஸ் அரசு, எதிர்க்கட்சிகளையும், பல்வேறு அமைப்புகள், சங்கங்களையும் சமாளிக்க, தன் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆளும்கட்சி உத்தரவிட்டுள்ளது.
இம்முறையும் குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் பரபரப்புடன் நடப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
30 ட்ரோன்
பெலகாவி கூட்டத்தொடரை முன்னிட்டு, 6 எஸ்.பி.,க்கள்; 10 கூடுதல் எஸ்.பி.,க்கள்; 38 டி.எஸ்.பி.,க்கள்; 100 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்; 235 சப் - இன்ஸ்பெக்டர்கள் உட்பட என 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இம்முறை 30 ட்ரோன் கேமராக்கள் வாயிலாக கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராட்டம் நடக்கும் 80க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
பெங்களூரில் இருந்து ஒரு கருடா சிறப்பு கமாண்டோ படையினரும்; 300 'பாடி கேமரா'க்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
போராட அனுமதி
பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்துவதற்காக, போலீசாரிடம், 55 விண்ணப்பங்களை சமர்ப்பித்து உள்ளனர்.
இதில் சிலருக்கு மட்டுமே நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடக்க உள்ளதால், ஏற்பாடுகளை மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி பார்வையிட்டார். இடம்: பெலகாவி.