நிதிஷ் ஆட்சியை ஆதரிப்பது வருத்தமாக இருக்கிறது: அமைச்சர் சிராக் பஸ்வான் 'பளிச்'
நிதிஷ் ஆட்சியை ஆதரிப்பது வருத்தமாக இருக்கிறது: அமைச்சர் சிராக் பஸ்வான் 'பளிச்'
ADDED : ஜூலை 27, 2025 01:59 AM

பாட்னா: பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., அடங்கிய தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இக்கூட்டணியில், லோக் ஜனசக்தி, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
பீஹாரில் வரும் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆளும் கூட்டணியும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.
இந்நிலையில், பீஹாரில் ஆளும் தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சருமான சிராக் பஸ்வான், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
பீ ஹார் முழுதும் கொலை, கொள்ளை, கடத்தல், பலாத்காரம் போன்ற குற்றச் செயல்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த, மாநில அரசு முற்றிலும் தவறி விட்டது. இந்த அரசு குற்றவாளிகளிடம் சர ணடைந்து விட்டது.
தற்போதைய சூழலில், பீஹார் மக்கள் பாதுகாப்பாக உணரவில்லை. குற்றங்கள் ஏன் குறையவில்லை என, அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். குற்றங்களை தடுக்க தவறிய மாநில அரசை ஆதரிப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
தேசிய அரசியலில் நீண்ட காலம் இருப்பது என் நோக்கமல்ல. பீஹாருக்காகவும், அதன் மக்களுக்காகவும் பணியாற்ற வேண்டும் என்பதே என் லட்சியம். டில்லியில் இருந்தால் அதை செய்ய முடியாது.
பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து, நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். கடந்த லோக்சபா தேர்தலை போலவே சட்டசபை தேர்தலிலும் 100 சதவீத வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.