ஹேமந்த் சோரன் உதவியாளர் வீடுகளில் ஐ.டி., அதிகாரிகள் அதிரடி சோதனை
ஹேமந்த் சோரன் உதவியாளர் வீடுகளில் ஐ.டி., அதிகாரிகள் அதிரடி சோதனை
ADDED : நவ 09, 2024 11:56 PM

ராஞ்சி: ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் உட்பட நெருக்கமான நபர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, கடந்த 2022ல் அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கை மாநில அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமான நபர்களின் வீடுகளில் சமீபத்தில் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்கள் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது.
இந்நிலையில், மத்திய ரிசர்வ் படை போலீசாரின் பாதுகாப்புடன், ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் ஆகிய பகுதிகளில் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் சுனில் ஸ்ரீவஸ்தவா உட்பட அவருக்கு நெருக்கமான நபர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
ஒன்பது இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜார்க்கண்டில், சட்டசபை தேர்தல் வரும் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.