காஷ்மீர் முழுவதையும் சேரவிடாமல் தடுத்தது 'நேருதான்!' : படேல் விழாவில் மோடி பேச்சு
காஷ்மீர் முழுவதையும் சேரவிடாமல் தடுத்தது 'நேருதான்!' : படேல் விழாவில் மோடி பேச்சு
UPDATED : அக் 31, 2025 11:53 PM
ADDED : அக் 31, 2025 11:35 PM

ஏக்தா நகர் : 'சர்தார் வல்லபபாய் படேல், காஷ்மீர் முழுவதையும் நம் நாட்டுடன் இணைக்க விரும்பினார்; ஆனால், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தான் அதை மறுத்தார்; காஷ்மீரை முழுதாக நம்முடன் சேரவிடாமல் தடுத்து விட்டார்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார். சுதந்திர போராட்ட வீரரும், நாட்டின் முதல் துணை பிரதமருமான சர்தார் வல்லபபாய் படேலின், 150வது பிறந்த நாள் நேற்று நாடு முழுதும் கொண்டாடப்பட்டது.
மலரஞ்சலி
இதையொட்டி, குஜராத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே ஏக்தா நகரில் கட்டப்பட்டுள்ள அவரின் 597 அடி உயர சிலைக்கு, பிரதமர் மோடி நேற்று மலரஞ்சலி செலுத்தினார்.
அப்போது, படேலின் சிலைக்கு ஹெலிகாப்டர் வாயிலாக மலர்கள் துாவப் பட்டன. படேலின் பிறந்த நாள், தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படும் வேளையில், அதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டின் ஒருங்கிணைப்புக்கு மிகப்பெரிய உந்து சக்தியாகவும், தேசத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமாகவும் சர்தார் வல்லபபாய் படேல் திகழ்ந்தார். சுதந்திரத்துக்கு பின், 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் சிக்கலான பணியை, சர்தார் வல்லபபாய் படேல் வெற்றிகரமாக செய்து முடித்தார்.
அவரின் கொள்கைகள், முடிவுகள் புதிய வரலாற்றை உருவாக்கின. 'ஒரே இந்தியா; சிறந்த இந்தியா' என்ற கருத்து, அவருக்கு மிகவும் முக்கியமானது. இந்த பிரச்னையை முந்தைய காங்கிரஸ் அரசு கையாள தவறியது.
பிற சமஸ்தானங்களை போல, முழு காஷ்மீரையும் நாட்டுடன் ஒருங்கிணைக்க சர்தார் படேல் விரும்பினார். ஆனால், முன்னாள் பிரதமர் நேரு அதை அனுமதிக்கவில்லை.
இதனால், காஷ்மீர் பிரிக்கப்பட்டு, தனி அரசியலமைப்பு மற்றும் தனிக்கொடி வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தவறு காரணமாகவே, நாடு பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டது.
சவாலாக மாறின
நாட்டின் இறையாண்மையே, படேலுக்கு எல்லாவற்றிற்கும் மேலாக இருந்தது. ஆனால், அவரது மரணத்துக்கு பின், அடுத்தடுத்து வந்த அரசுகள், அதை பின்பற்றவில்லை.
காஷ்மீர் விஷயத்தில் செய்த தவறுகள், வடகிழக்கு மாநிலங்களில் எழுந்த பிரச்னைகள், நாடு முழுதும் பரவிய நக்சல் பயங்கரவாதம் போன்றவை, நாட்டின் இறையாண்மைக்கு சவாலாக மாறின.
காங்கிரசின் பலவீனமான கொள்கைகளால், காஷ்மீரின் ஒரு பகுதி, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புக்கு கீழ் வந்தது. இதனால், அங்கு பயங்கரவாத செயல்கள் அரங்கேறின. அதற்கு காங்கிரஸ் அடிபணிந்தது.
படேலின் தொலைநோக்கு பார்வையை மறந்தது. ஆனால், நாம் மறக்கவில்லை-. ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது பிரிவை ரத்து செய்ததன் வாயிலாக, அது நம் நாட்டுடன் ஒன்றுபட்டுள்ளது.
இந்தியாவின் உண்மையான பலம் என்ன என்பதை, இப்போது பாகிஸ்தானும், பயங்கரவாதிகளும் அறிந்திருப்பர். நம் நாட்டின் மீது யாராவது கை வைத்தால், அவர்களது நாட்டிற்கே சென்று தாக்குவோம் என்ற செய்தியை, இன்று உலக நாடுகள் அறிந்துள்ளன. தேசிய பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது; இது தான் வல்லபபாய் படேலின் இந்தியா.
கடந்த, 11 ஆண்டுகளாக, நக்சல்களுக்கு எதிரான வேட்டையை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. 2014க்கு முன், நாட்டில் உள்ள, 125 மாவட்டங்கள் நக்சல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டன. தற்போது, 11 மாவட்டங்களில் தான் நக்சல்கள் உள்ளனர்.
குறிப்பாக, மூன்று மாவட்டங்களில் மட்டுமே, நக்சல்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. நக்சல் அமைப்பினர் அனைவரையும் வேரறுக்கும் வரை, அவர்களுக்கு எதிரான போர் தொடரும்.
அதேபோல, சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களும், ஊடுருவல்காரர்களும், நாட்டின் ஒற்றுமைக்கும், உள்நாட்டு பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்கள், நம் வளங்களை ஆக்கிரமித்து, மக்கள்தொகை சமநிலையை சீர்குலைத்து, நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த கால அரசுகள், ஓட்டு வங்கி அரசியலுக்காக இப்பிரச்னையை கண்டுகொள்ளாமல் இருந்தன.
ஊடுருவல்காரர்களுக்கு எதிராக, ஒரு தீர்க்கமான போரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தேசிய ஒற்றுமை தினத்தில், நம் நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு சட்டவிரோத குடியேறிகளும் வெளியேற்றப்படுவதை நாம் உறுதி செய்வோம்.
படேல் மற்றும் அவரின் சந்ததியினருக்கு, காங்கிரஸ் அரசால் நேர்ந்த நிலை அனைவருக்கும் தெரியும். அம்பேத்கருக்கு அவரது வாழ்நாளிலும், மரணத்துக்கு பின்னும் என்ன நேர்ந்தது? நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், டாக்டர் லோஹியா, ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு என்ன செய்தனர்? ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் தாக்குதல்களுக்கும், சதிகளுக்கும் உள்ளானது.
வந்தே மாதரம் பாடலில் சில பகுதிகளை மத அடிப்படையில் காங்கிரஸ் நீக்கியது. இது, இந்தியாவின் பிரிவினைக்கு அடித்தளமிட்டது. இது, நடக்காமல் இருந்திருந்தால், நாட்டின் வரைபடம் முற்றிலும் வேறுபட்டிருக்கும். நாட்டின் ஒற்றுமைக்கு மொழி ஒரு முக்கிய துாண்.
இங்கு, நூற்றுக்கணக்கான மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகள், நாட்டின் ஆக்கப்பூர்வமான சிந்தனையை அடையாளப்படுத்துகின்றன. அதனால் தான், நாடு மொழியியல் ரீதியாக வளமான தேசமாக மாறியுள்ளது. நம் மொழிகள், பல்வேறு இசைக்குறிப்புகளை போலவே, நம் அடையாளத்தை வலுப்படுத்தியுள்ளன.
உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ், நம் நாட்டில் உள்ளது என்று பெருமையுடன் கூறுகிறோம். சமஸ்கிருதம் போன்ற அறிவுப்புதையல் நம்மிடம் உள்ளது. ஒவ்வொரு குழந்தையும், தங்கள் தாய்மொழியில் முன்னேற வேண்டும் என்பதையே மத்திய அரசு விரும்புகிறது.
அதனால், ஒவ்வொரு இந்திய மொழியையும் ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

