ADDED : பிப் 15, 2024 06:37 AM

பெங்களூரு : லாபத்தில் பங்கு தருவதாக நம்ப வைத்து மோசடி செய்த, 'இட்லி குரு' ஹோட்டல் தம்பதி கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரின் காமாட்சி பாளையா உட்பட, பல்வேறு இடங்களில், தொழிலதிபர் கார்த்திக் ஷெட்டியும், அவரது மனைவி மஞ்சுளாவும், 'இட்லி குரு' என்ற பெயரில், ஹோட்டல் நடத்துகின்றனர். தங்கள் ஹோட்டலில், முதலீடு செய்தால் அதிகமான பங்கு கொடுப்பதாக, விளம்பரம் செய்திருந்தனர்.
கடந்த 2022 அக்டோபரில், மாகடி பிரதான சாலையின், கொட்டிகே பாளையாவில் உள்ள, 'இட்லி குரு' அலுவலகத்துக்கு சென்ற சேத்தன் என்பவர், டிபாசிட் செய்ய விரும்புவதாக கூறினர்.
இவரிடம், 3 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டனர். மாதந்தோறும் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என, நம்ப வைத்தனர். அது மட்டுமின்றி, இட்லி குரு ஹோட்டல் நடத்த இடம் கொடுத்தால், கூடுதல் பணம் தருவதாக கூறினர்.
சேத்தனும், தன் வீட்டு கீழ் தளத்தில் 9,000 ரூபாய் வாடகை கிடைத்து வந்த கடையை காலி செய்ய வைத்து, இடத்தை கார்த்திக் ஷெட்டியிடம் ஒப்படைத்தார்.
மேலும், இந்த கடையை ஹோட்டலாக வடிவமைக்க, 3 லட்சம் ரூபாய் செலவிட்டார். ஆனால் ஹோட்டல் திறப்பதற்கு பதில், மொபைல் உணவகம் திறந்து வியாபாரத்தை துவங்கினர். எதிர்பார்த்தபடி வியாபாரம் நடக்கவில்லை. எனவே வேறு இடத்தில் ஹோட்டல் திறக்கலாம். 10 சதவீதம் கமிஷன் தருவதாக கார்த்திக் ஷெட்டி கூறினார்.
தான் டிபாசிட்டாக கொடுத்த, 3 லட்சம், கடையை ஹோட்டலாக மாற்ற செய்த 3 லட்சத்தை திரும்ப தரும்படி சேத்தன் கேட்டார். ஆனால் பணம் கொடுக்க மறுத்த கார்த்திக் ஷெட்டி, மஞ்சுளா தம்பதி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
அதன்பின் சேத்தன் விசாரித்த போது, தன்னை போன்றே பலரிடம், தம்பதி லட்சக்கணக்கான ரூபாய் பெற்று, மோசடி செய்தது தெரிந்தது.
இது தொடர்பாக, காமாட்சி பாளையா போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கினர். தங்கள் மீது வழக்கு பதிவானதும், தம்பதி தலைமறைவாகி, மும்பைக்கு தப்பியோடினர்.
இவர்களை மும்பையில் தேடி கண்டுபிடித்த காமாட்சி பாளையா போலீசார், நேற்று காலை கைது செய்தனர். இன்று பெங்களூருக்கு அழைத்து வருகின்றனர்.

