சொந்த வீட்டுக்கு வந்து விட்டேன் ஜெகதீஷ் ெஷட்டர் பெருமிதம்
சொந்த வீட்டுக்கு வந்து விட்டேன் ஜெகதீஷ் ெஷட்டர் பெருமிதம்
ADDED : பிப் 17, 2024 11:30 PM

மைசூரு, : ''மத்தியில் இருந்து பா.ஜ., தலைவர்கள் என்னை கட்சியில் சேருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். இப்போது என் சொந்த வீட்டுக்கு வந்ததாக உணர்கிறேன்,'' என பா.ஜ., முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ெஷட்டர் தெரிவித்தார்.
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூட்டில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ெஷட்டர், நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின், கோவில் கருவறை அருகில் அமர்ந்து இரண்டு நிமிடம் தியானத்தில் ஈடுபட்டார்.
பின், நஞ்சன்கூடு நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 'மீண்டும் மோடி சுவர் ஓவியம்' வரைந்து திட்டத்தை துவக்கி வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
மத்திய பா.ஜ., தலைவர்கள், என்னை பா.ஜ.,வில் சேருமாறு, தொடர்ந்து அழைப்பு விடுத்தனர். அதனால், பா.ஜ.,வில் சேர்ந்தேன். இப்போது என் சொந்த வீட்டுக்கு வந்ததாக உணர்கிறேன். மாநில தலைவர்கள், மத்திய தலைவர்கள், தொண்டர்கள் எனக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர்.
சில தனிப்பட்ட பிரச்னையால் காங்கிரசில் சேர்ந்தேன். அதிலும் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை; அக்கட்சி தலைவர்கள் என்னை மரியாதையுடன் நடத்தினர்.
நானும் நல்ல முடிவெடுத்து மீண்டும் பா.ஜ.,வில் இணைந்து உள்ளேன். வரும் லோக்சபா தேர்தலில், நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மாநிலத்தில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. 22 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. மத்திய பா.ஜ., தலைவர்கள் அறிவுறுத்தினால், லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நகரின் சுவரில், 'மீண்டும் மோடி சுவர் ஓவியம்' வரைந்து திட்டத்தை, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ெஷட்டர் துவக்கி வைத்தார். இடம்: நஞ்சன்கூடு, மைசூரு.