ADDED : ஜன 26, 2024 02:05 AM

கர்நாடக பா.ஜ.,வில் மூத்த தலைவராக வலம் வந்தவர் ஜெகதீஷ் ஷெட்டர், 68. அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர் பதவிகளை வகித்தவர். 2012ல் ஓராண்டு முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். 2023 மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வில் இவருக்கு சீட் வழங்கப்படவில்லை.
இதனால், கடும் அதிருப்தி அடைந்த அவர், பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்தார். சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, படுதோல்வி அடைந்தார். காங்., ஆட்சியில் இவருக்கு எம்.எல்.சி., பதவி தரப்பட்டது. அமைச்சர் பதவி எதிர்பார்த்த அவருக்கு, இதனால் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, இவரது மகனான பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் நேற்று முன்தினம் டில்லி சென்றனர். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தினர்.
சிறிது நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும், எம்.எல்.சி., பதவியையும் ஜெகதீஷ் ஷெட்டர் ராஜினாமா செய்தார். பின், பா.ஜ., தலைமை அலுவலகத்தில் எடியூரப்பா முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், பா.ஜ., தேசிய பொது செயலருமான பூபேந்திர யாதவ், உறுப்பினர் அட்டையை ஷெட்டருக்கு வழங்கினார். தொடர்ந்து, தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின், ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது:
என்னுடைய ஆதரவாளர்களும், தலைவர்களும் பா.ஜ.,வில் இணைவதை விரும்பினர். அமித் ஷா, என்னை கவுரவத்துடன் வரவேற்றார். பா.ஜ.,வில் மீண்டும் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நரேந்திர மோடி, மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். காங்கிரசில் இருந்த போது நேர்மையாக செயல்பட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

