புறாவுக்காக தனி கட்சி துவக்கிய ஜெயின் சமூகம்; மும்பை உள்ளாட்சி தேர்தலில் ஒரு கை பார்க்க திட்டம்
புறாவுக்காக தனி கட்சி துவக்கிய ஜெயின் சமூகம்; மும்பை உள்ளாட்சி தேர்தலில் ஒரு கை பார்க்க திட்டம்
ADDED : அக் 15, 2025 02:20 AM

மும்பை : மஹாராஷ்டிராவின் மும்பையில், புறாவுக்காக ஜெயின் சமூகத்தினர் சார்பில் தனி அரசியல் கட்சியே துவக்கப்பட்டுள்ளது. இதனால், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால், ஜெயின் சமூகத்தினருக்கே சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
நாட்டின் வளமிக்க உள்ளாட்சி அமைப்பான பி.எம்.சி., எனப்படும் மும்பை மாநகராட்சிக்கு, கடந்த 2017 முதல் தேர்தல் நடத்தப்படவில்லை. 74,000 கோடி ரூபாய் பட்ஜெட் கொண்ட இந்நிர்வாகத்தின் பொறுப்பில், தற்போது எந்தவொரு அரசியல் கட்சிகளும் இல்லை. மாநில அரசின் நிர்வாகத்தால் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.
வார்டுகள் மறுசீரமைப்பு, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பிரச்னை, சட்ட சிக்கல்கள் ஆகியவை காரணமாக தேர்தல் நடத்துவது தாமதமாகி வருகிறது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடந்தால் மொத்த வெற்றியும் ஒரு சமூகத்திற்கு கைமாறி விடுமோ என அரசியல் கட்சிகள் வயிற்றில், தற்போது புளியை கரைக்கும் அளவுக்கு மும்பையில் ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
மும்பையில் உள்ள இந்தியா கேட் பகுதி போல, தாதரின் புறநகர் பகுதியில் புறாவுக்கென்றே தனி இடம் இருக்கிறது. ஆயிரக்கணக்கான புறாக்களுக்கு அங்குள்ள ஜெயின் சமூகத்தினர் தான் உணவும், நீரும் கொடுத்து பராமரித்து வருகின்றனர்.
புறாக்களின் எச்சங்களால் தோல் நோய் பரவும் அபாயம் உருவானதை அடுத்து, அவற்றை பராமரிக்க பி.எம்.சி., நிர்வாகம் கடந்த ஜூலை மாதம் தடை விதித்தது.
இதை ஏற்க முடியாமல் மனம் வருந்திய ஜெயின் சமூகத்தினர், சாலைகளில் அவற்றுக்கு உணவளித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். எனினும், பி.எம்.சி., நிர்வாகம், முடிவில் உறுதியுடன் இருந்ததால், நீண்ட யோசனைக்குப் பின் புறாக்களை பாதுகாக்க ஜெயின் சமூகத்தினர் தனி அரசியல் கட்சியையே துவங்கி விட்டனர்.
புறா சின்னத்துடன், 'ஷாந்தி துாத் ஜன்கல்யாண்' என்ற பெயரில் அந்த அரசியல் கட்சி உதயமாகி இருக்கிறது. இது ஜெயின் சமூகத்தினருக்கு மட்டுமல்ல, விலங்குகள் நல உரிமைக்காகவும் துவக்கப்பட்ட முதல் கட்சி என்ற பெயர் பெற்றுள்ளது.
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கணிசமான அளவுக்கு ஜெயின் சமூகத்தினர் வசித்து வருவதால், உள்ளாட்சித் தேர்தலில் அவர்களே வெற்றி வாகை சூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், வளம் கொழிக்கும் பி.எம்.சி., நிர்வாகம் எங்கே தங்கள் கைவிட்டு போய்விடுமோ என்ற கலக்கத்தில் அரசியல் கட்சிகள் இருக்கின்றன.