பரசுராம்புரியாக மாறிய உத்தரபிரதேசத்தின் ஜலாலாபாத்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு
பரசுராம்புரியாக மாறிய உத்தரபிரதேசத்தின் ஜலாலாபாத்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு
ADDED : ஆக 20, 2025 09:32 PM

புதுடில்லி: உத்தரபிரதேச மாநிலத்தின் ஜலாலாபாத் நகரம், பரசுராம்புரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத் நகரம் தெய்வீகம் சார்ந்தது என்றும் அங்கு பரசுராமர் கோவில் இருப்பதாகவும் மாநில அரசின் தலைமைச்செயலாளர், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தில், ஜலாலாபாத்தின் பெயரை பரசுராம்புரி என மாற்றுவதற்கு முன்மொழிந்து ஒப்புதல் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இதனை அடுத்து, இன்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில், இதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டு, ஜலாலாபாத் என்ற நகரத்தின் பெயரை பரசுராம்புரி என மாற்றப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நன்றி தெரிவித்து மத்திய இணை அமைச்சர் ஜிதின் பிரசதா பதிவிட்டுள்ளதாவது:
உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரில் உள்ள ஜலாலாபாத்தின் பெயரை 'பரசுராம்புரி' என மாற்ற அனுமதி வழங்கியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மனமார்ந்த நன்றி.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் தலைமைக்கு தனது மனமார்ந்த நன்றி. இது பெருமை சேர்க்கும் தருணம்.
பரசுராமரின் பாதங்களில் கோடிக்கணக்கான வணக்கங்கள்.உங்கள் அருளால் மட்டுமே இந்தப் புனிதப் பணியில் நான் ஒரு கருவியாக மாற முடிந்தது. உங்கள் கருணைப் பார்வை உலகம் முழுவதும் நிலைத்திருக்கட்டும்.
இவ்வாறு ஜிதின் பிரசதா பதிவிட்டுள்ளார்.