ADDED : ஜூன் 28, 2025 10:25 PM

ஆமதாபாத்: '' ரஷ்யாவில் ஜேம்ஸ்பாண்ட் வேலை செய்யவில்லை. ரகசியமாக எந்த வேலையிலும் ஈடுபடவில்லை'', என முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் கூறியுள்ளார்.
' ஆப்பரேஷன் சிந்தூர் ' நடவடிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான குழு சென்று இந்தியாவின் நடவடிக்கையை விளக்கிவிவிட்டு திரும்பியது. இதற்கு பிறகு சசி தரூருக்கு இரண்டாவது ராஜதந்திர சுற்று பயணத்தை மத்திய அரசு ஒதுக்கியது. இதன்படி சசி தரூர் ரஷ்யா சென்றுள்ளார்.
இந்நிலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த கலந்துரையாடலில் சசி தரூர் கூறியதாவது: எனது சகாக்களை தொடர்பு கொள்ள ரஷ்யா பயணம் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. இந்தியாவில் நமது பார்லிமென்ட் வெளியுறவு விவகாரக் குழுவில் ராஜ்யசபா மற்றும் லோக்சபா எம்.பி.,க்கள் இடம்பெறுவார்கள்.
ஆனால், பல நாடுகளில் இது வேறுபடும். எனவே, இந்த முறை மேல் சபை மற்றும் கீழ்சபையை சேர்ந்த குழுவினரை சந்தித்தேன். எனது பழைய நண்பர், ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சரையும் சந்தித்தேன். மத்திய அரசால் அனுப்பப்பட்ட குழு, ஏற்கனவே இங்கு வந்து உறுப்பினர்களை சந்தித்து பேசிவிட்டு சென்றதால் எனது பணி எளிதாக இருந்தது.
இந்தியாவின் நீண்ட கால மற்றும் நம்பிக்கையான நட்பு நாடாக ரஷ்யா இருந்து வருகிறது. இந்த உறவை பேணுவது சிறப்பானது. சில பொது நிகழ்ச்சிகள், கலந்துரையாடல், மாணவர்களுடன் சந்தித்து பேசி உள்ளேன். எனது பயணம் இந்த வகையில் தான் அமைந்துள்ளது. மக்கள் யூகித்து வியக்க வைக்கும் ஜேம்ஸ்பாண்ட் விஷயங்கள் ஏதும் இல்லை. அந்த இயல்பு ஏதும் இல்லை. ரகசிய பணிகளும் மேற்கொள்ளவில்லை.
வெளிநாடுகள் சென்று அந்நாட்டினரை சந்தித்த போது, இந்தியாவுக்கு எதிராக அத்துமீறல் நடந்தால், அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.