ஜம்மு - காஷ்மீர் பிரசார கூட்டம் மேடையில் மயங்கிய கார்கே
ஜம்மு - காஷ்மீர் பிரசார கூட்டம் மேடையில் மயங்கிய கார்கே
ADDED : செப் 30, 2024 12:00 AM
ஜம்மு, ஜம்மு - காஷ்மீரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 83, பேசியபோது, திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், சிறிது நேர ஓய்வுக்கு பின் மீண்டும் தொண்டர்களிடையே பேசிய கார்கே, ''பிரதமர் மோடியை அதிகாரத்தில் இருந்து நீக்கும் வரை நான் உயிருடன் தான் இருப்பேன்,'' என்றார்.
ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தொகுதி களுக்கான மூன்றாம் கட்டத் தேர்தல் நாளை நடக்கிறது. இதையொட்டி, தங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு - காஷ்மீரில் கதுவா மாவட்டத்தின் ஜஸ்ரோதா பகுதியில் பிரசார பொதுக் கூட்டத்தில் நேற்று பங்கேற்று பேசினார். அப்போது, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசை கண்டித்து அவர் உரையாற்றினார்.
அப்போது, கார்கே திடீரென மயங்கி சரிந்தார். உடனே, அருகில் இருந்த கட்சி நிர்வாகிகள் அவரை தாங்கி பிடித்தபடி, மேடையில் இருந்த இருக்கையில் அமர வைத்தனர். சிறிது நேர ஓய்வுக்கு பின் மீண்டும் கார்கே பேசத் துவங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ''எனக்கு 83 வயது. எனினும், நான் விரைவில் சாக மாட்டேன்; பிரதமர் மோடியை, அதிகாரத்தில் இருந்து நீக்கும் வரை நான் உயிருடன் தான் இருப்பேன். இந்த தேர்தலில், பா.ஜ., ஏராளமான வாக்குறுதிகளை அளித்திருந்தது.
''ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் எதையும் நிறைவேற்றவில்லை. வளர்ச்சி என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு பிரச்னைகளை மக்களுக்கு அளித்துள்ளது,'' என்றார்.
இதற்கிடையே, பிரசாரத்தில் மயங்கி விழுந்த கார்கேவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.