ADDED : ஆக 30, 2025 06:10 AM

புதுடில்லி: தயான் சந்த் சாதனைக்கு அங்கீகாரமாக, 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டுமென மீண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த். 1905, ஆக. 29ல் உ.பி.,யில் பிறந்தார். சிறந்த முன்கள வீரரான இவர், தனது மந்திர ஆட்டத்தால் 1928, 1932, 1936ல் இந்திய அணி தொடர்ந்து ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல கைகொடுத்தார். ஹாக்கி வரலாற்றில் அதிக கோல் (570, 185 போட்டியில்) அடித்து சாதனை படைத்தார். 'ஹாக்கி மந்திரவாதி' என போற்றப்பட்ட இவர், 74வது வயதில் (1979, டிச.3) காலமானார்.
இவரது பெயரில் இந்திய விளையாட்டின் உயர்ந்த 'தயான் சந்த் கேல் ரத்னா விருது' வழங்கப்படுகிறது. பிறந்தநாளான ஆக. 29, தேசிய விளையாட்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இவருக்கு 1956ல் 'பத்ம பூஷண்' விருது வழங்கப்பட்டது. நாட்டின் உயர்ந்த பாரத ரத்னா விருது (மறைவுக்கு பின்) வழங்கப்படாதது பெரும் குறையாக உள்ளது.
சச்சினுக்கு கவுரவம் முன்பு பாரத ரத்னா விருதுக்கு விளையாட்டு நட்சத்திரங்கள் பரிசீலிக்கப்படவில்லை. கலை, இலக்கியம், அறிவியல், பொது வாழ்வில் செய்த சேவைக்காக வழங்கப்பட்டது. 2011ல் 'அனைத்து துறையை சார்ந்தவர்களும் தகுதியானவர்கள்' என திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி கிரிக்கெட் அரங்கில் நிகழ்த்திய சாதனைக்காக சச்சினுக்கு 201௪ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
திலிப் டிர்கே முயற்சி இதையடுத்து தயான் சந்த் பெயரையும் பரிந்துரை செய்ய வேண்டுமென, தற்போதைய 'ஹாக்கி இந்தியா' அமைப்பின் தலைவரும் முன்னாள் வீரருமான திலிப் டிர்கே பல கட்ட முயற்சிகள் மேற்கொண்டார். 2016ல் பிஜு ஜனதா தள எம்.பி.,யாக இருந்த இவர், ராஜ்ய சபாவில் கோரிக்கை விடுத்தார். 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்று மனு அளித்தார். டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் அஜித் பால் சிங், ஜாபர் இக்பால், அஜய் பன்சால் உள்ளிட்ட முன்னாள் வீரர்களுடன் போராட்டம் நடத்தினார்.
மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் கூட தயான் சந்த் உருவத்தை மணலில் வடிவமைத்து வலியுறுத்தினார். இதற்கு எல்லாம் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நரசிம்மராவ், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணை பிரதமர் அத்வானி உட்பட பலருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. தயான் சந்த் மட்டும் புறக்கணிக்கப்படுகிறார்.
அரசுக்கு கோரிக்கை திலிப் டிர்கே கூறுகையில்,''ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் ஹாக்கியில் தான் கிடைத்தது. இதற்கு தயான் சந்த் முக்கிய காரணம். இந்திய விளையாட்டுக்கு இவர் செய்த சேவைக்கு அங்கீகாரமாக பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென அனைத்து ஹாக்கி நட்சத்திரங்கள் சார்பில் அரசை கேட்டுக் கொள்கிறேன்,''என்றார்.