ADDED : அக் 09, 2024 05:28 AM

கொப்பால் : முதல்வர் சித்தராமையா கடந்த 5 ம் தேதி, கொப்பால் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். பயணத்தை முடித்துவிட்டு, பல்லாரி ஜிண்டால் விமான நிலையத்திற்கு சென்றார்.
அப்போது முதல்வர் சென்ற கார், பாதுகாப்பு வாகனத்திற்கு எதிர் திசையில், கங்காவதி சுயேச்சை எம்.எல்.ஏ.,வும், பா.ஜ., பிரமுகருமான ஜனார்த்தன ரெட்டி அமர்ந்திருந்த, 'ரேஞ்ச் ரோவர்' கார் வந்தது.
இதனால் ஒரு நிமிடம், முதல்வர் கார் நின்று சென்றது. இடையூறு ஏற்படுத்தும் வகையில், கார் ஓட்டியதாக ஜனார்த்தன ரெட்டியின் டிரைவர் மீது, கங்காவதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று பெங்களூரு சென்ற கங்காவதி போலீசார், ஜனார்த்தன ரெட்டியின் ரேஞ்ச் ரோவர் காரை பறிமுதல் செய்து, கங்காவதிக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து ஜனார்த்தன ரெட்டி கூறுகையில், '' சித்தராமையா அரசியல் ரீதியாக எனக்கு பிரச்னை கொடுத்தாலும், முதல்வர் என்ற முறையில் அவருக்கு மதிப்பு கொடுப்பேன். பல்லாரி வீட்டில் ஹோமம் நடந்ததால், காரில் அவசரமாக சென்றோம்.
''அரை மணி நேரமாக முதல்வரின் பாதுகாப்பு வாகனத்திற்காக காத்து இருந்தோம். ஆனால் வரவில்லை. முதல்வர் வருவதற்குள் சென்று விடலாம் என்று தான் சென்றோம். நான் முட்டாள் இல்லை,'' என்றார்.