மணிப்பூரில் பா.ஜ., ஆதரவை திரும்ப பெற்ற கட்சி தலைவரை நீக்கியது ஐக்கிய ஜனதா தளம்
மணிப்பூரில் பா.ஜ., ஆதரவை திரும்ப பெற்ற கட்சி தலைவரை நீக்கியது ஐக்கிய ஜனதா தளம்
ADDED : ஜன 23, 2025 12:28 AM

இம்பால், மணிப்பூரில், ஆளும் பா.ஜ., அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்த அம்மாநில ஐக்கிய ஜனதா தள தலைவர் ஷேத்ரிமாயும் பைரேன் சிங், கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 60 எம்.எல்.ஏ.,க்கள் உடைய இங்கு, ஆளும் பா.ஜ.,வுக்கு 37 எம்.எல்.ஏ.,க்களும், அதன் கூட்டணி கட்சியான நாகா மக்கள் முன்னணிக்கு ஐந்து எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர்.
மேலும், மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.,க் களும் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
மணிப்பூரில் 2022ல் நடந்த சட்டசபை தேர்தலில், பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஆறு பேர் வென்றனர்.
இவர்களில் ஐந்து பேர், பா.ஜ.,வில் இணைந்ததால், சட்டசபையில் ஐக்கிய ஜனதா தளத்தின் பலம், 1 ஆக குறைந்தது. அப்துல் நசீர் என்பவர் மட்டுமே அக்கட்சியின் எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
மத்தியிலும், பீஹாரிலும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பிரதான கட்சியாக உள்ளது. மணிப்பூரிலும் ஆளும் பா.ஜ.,வுக்கு அக்கட்சி ஆதரவு அளிக்கிறது.
இந்நிலையில், நேற்று மணிப்பூரில் ஆளும் பா.ஜ., அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக, அம்மாநில கவர்னர் அஜய் குமார் பல்லாவுக்கு, ஐக்கிய ஜனதா தள மாநில தலைவர் ஷேத்ரிமாயும் பைரேன் சிங் கடிதம் எழுதினார்.
இதனால், முதல்வர் பைரேன் சிங் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றாலும், ஆதரவை திரும்பப் பெறுவதாக அவர் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கடிதம் வெளியான சில மணி நேரங்களிலேயே, ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து ஷேத்ரிமாயும் பைரேன் சிங்கை அக்கட்சி மேலிடம் நீக்கியது.
இது குறித்து அக்கட்சி வெளியிட்ட அறிவிப்பில், 'மணிப்பூர் சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் ஐக்கிய ஜனதா தளம் இடம் பெறாது.
'மேலிட தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல், ஷேத்ரிமாயும் பைரேன் சிங் இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். பா.ஜ.,வுக்கான ஆதரவு தொடரும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.