ஜந்தர் மந்தரில் பேராட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதுகாப்பு கருதி மெட்ரோ, ரயில்கள் அனைத்தும் ரத்து
ஜந்தர் மந்தரில் பேராட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதுகாப்பு கருதி மெட்ரோ, ரயில்கள் அனைத்தும் ரத்து
UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 05:46 PM
புதுடில்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ் குமார் பதவி விலகக் கோரி, டில்லி, ஜந்தர் மந்தரில் இன்று, காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் சில மாணவர் அமைப்புகள் அறிவித்து இருந்த போராட்டத்திற்கு டில்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இருப்பினும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் டில்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் நேற்று இரவே மூடப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இன்று டில்லி வந்து, புறப்பட்டு செல்லும் ரயில்களின் நேரங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியும், அதற்கு காரணமான தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமார் பதவி விலக வலியுறுத்தியும், தேசிய தலைநகர் டில்லியில் கடந்த 5ம் தேதி முதல் போராட்டங்கள் நடந்து வருகின்றன. காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் சில மாணவர் அமைப்புகள் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால், டில்லியின் பல்வேறு பகுதிகளில், துணை ராணுவப் படைகள் உட்பட 25,000-க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று, டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் சில மாணவர் அமைப்புகள் விண்ணப்பித்து இருந்தன. ஆனால், அவற்றுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளது.
இது தொடர்பாக புதுடில்லி மண்டல போலீஸ் இணை கமிஷனர் நுபுர் பிரசாத் கூறியதாவது:
காக்ரோச் ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் என்பவரிடம் இருந்து எங்களுக்கு ஒரு விண்ணப்பம் வந்துள்ளது. அக்டோபர் 10ல் ஜந்தர் மந்தரில் நடைபெறவுள்ள போராட்டம் குறித்த அறிவிப்பு, அந்த விண்ணப்பத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு குறித்த காலத்திற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், குறைந்த கால அவகாசத்தில், காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் விண்ணபிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், டில்லி, ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தின் போது விதிகள் கடுமையாக மீறப்பட்டன. அவர்கள் உறுதி அளித்தபடி செயல்பட வில்லை. சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையைத் தவிர்க்கவும், பொது அமைதியைப் பேணவும் இம்முறை அனுமதி வழங்கப்படவில்லை.
புதுடில்லி பகுதியில், ‘பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா’ சட்டத்தின், பிரிவு 163, அமலில் உள்ளது. பொது அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்காக இந்தப் பிரிவின் கீழ், சட்டப்படி நியாயமான தடுப்புக்கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விதிகளை மீறுவோர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு முதலே டில்லியின், 57 மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டன. நேற்று இரவு 9:00 மணிக்கு பின், அனைத்து மெட்ரோ ரயில்களும் மூடப்பட்டன. ரயில்களும் இயக்கப்படவில்லை.
அத்துடன், பல்வேறு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று டில்லி வந்து, புறப்பட்டு செல்லும் ரயில்களின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நேற்று புறப்பட்டு, இன்று டில்லி வர வேண்டிய பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல, டில்லியில் இருந்து இன்று புறப்படும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
