ADDED : செப் 19, 2024 05:51 AM

வனப்பகுதிக்குள் பயணம் மேற்கொண்டவர்களுக்கு, மான்கள் அங்கும் இங்கும் துள்ளிக் குதித்து ஓடுவதைப் பார்த்த அனுபவம் கிடைத்து இருக்கும். நீண்ட கொம்புகளுடன் வலம் வரும் மான்கள், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வனவிலங்குகளில் ஒன்றாக உள்ளது.
வெளிநாடுகளில் அதிகம் காணப்படும் அரியவகை 'பிளாக்பக்' வகை மான்கள் இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் மட்டும் காணப்படுகின்றன. இதில் கர்நாடகாவும் ஒன்று.
துமகூரு மதுகிரி அருகே மைதேனஹள்ளி கிராமத்தில் ஜெயமங்கலி என்ற வனப்பகுதி உள்ளது. இங்கு பிளாக்பக் மான்கள் அதிகம் வசிக்கின்றன. இதனால் ஜெயமங்கலியை பிளாக்பக் மான்கள் காப்பமாக அரசு அறிவித்து உள்ளது. இந்த காப்பகம் 798 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு 2,000 க்கும் மேற்பட்ட பிளாக்பக் மான்கள் உள்ளன.
அதைத்தவிர 67 வகையான வண்ணத்துப்பூச்சிகள், பாலுாட்டிகளும் உள்ளன. சிறிய இந்திய சிவெட், வவ்வால்கள், இந்திய ஓநாய், இந்திய முயல், காட்டுப் பூனை, இந்திய சாம்பல் மங்கூஸ் உள்ளன.
இதுதவிர 80 க்கும் மேற்பட்ட மருத்துவ தாவரங்களும் உள்ளன. இயற்கை ஆர்வலர்களுக்கு இந்த காப்பகம் சொர்க்கமாக உள்ளது. இந்த சரணாலயத்தில் குளிர்காலத்தில் வெப்பம் 8 டிகிரி செல்சியஸாகவும், கோடைக்காலத்தில் 43 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். பருவமழைக்குப்பின், சரணாலயத்தை பார்வையிட உகந்த நேரம். வெயிலுக்கு முன்பு அல்லது மாலை சரணாலயத்திற்கு செல்ல உகந்த நேரம்.
தினமும் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை சரணாலயம் திறந்து இருக்கும். நுழைவுக்கட்டணம் 100 ரூபாய். கேமரா எடுத்துச் சென்றால் அதற்கு 50 ரூபாய் கட்டணம். பெங்களூரில் இருந்து சரணாலயம் 117 கி.மீ., துாரத்தில் அமைந்து உள்ளது.
எப்படி செல்வது
பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து மதுகிரிக்கு அடிக்கடி அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மதுகிரி சென்று அங்கிருந்து சரணாலயத்தை சென்றடையலாம்.
ரயிலில் செல்பவர்கள் ஆந்திராவின் ஹிந்துப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து செல்லலாம் - நமது நிருபர் -.