ஜே.இ.இ., தேர்வு முடிவுகள் வெளியீடு: 24 பேர் 'சென்டம்'
ஜே.இ.இ., தேர்வு முடிவுகள் வெளியீடு: 24 பேர் 'சென்டம்'
ADDED : ஏப் 20, 2025 03:31 AM

புதுடில்லி: ஜே.இ.இ., இரண்டாம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், இரண்டு பெண்கள் உட்பட 24 பேர், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர்.
ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர, ஜே.இ.இ., எனப்படும், ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த தேர்வு, ஜே.இ.இ., முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என, இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மை தேர்வானது, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை சார்பில், ஆண்டுதோறும் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
அதன்படி, வரும் 2025 - -26-ம் கல்வி ஆண்டுக்கான ஜே.இ.இ., முதற்கட்ட முதன்மை தேர்வு, ஜன., 22 - 30 வரை நடந்தது. 10.61 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வின் முடிவுகள், பிப்., 11ல் வெளியானது.
இதைத் தொடர்ந்து, ஜே.இ.இ., இரண்டாம் கட்ட தேர்வு, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 13 மொழிகளில், கடந்த 2 - 9- வரை நடந்தது. 9.92 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதினர்.
இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, இரண்டு பெண்கள் உட்பட 24 பேர், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஏழு பேர், தெலுங்கானா, உ.பி., -- மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தலா மூன்று பேர்; டில்லி, மேற்கு வங்கம், குஜராத்தைச் சேர்ந்த தலா இரண்டு பேர்; கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர்.
முதற்கட்ட முதன்மை தேர்வில், 39 பேர் மோசடியில் ஈடுபட்ட நிலையில், இரண்டாம் கட்ட தேர்வில், 110 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதுதவிர, 23 பேரின் தேர்வு முடிவுகள் ஆவணங்கள் சரிபார்ப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

