ஜெகதீஷ் ஷெட்டரை பா.ஜ.,வுக்கு இழுக்க முயற்சி? போக மாட்டேன் என மறுக்கிறார்
ஜெகதீஷ் ஷெட்டரை பா.ஜ.,வுக்கு இழுக்க முயற்சி? போக மாட்டேன் என மறுக்கிறார்
ADDED : ஜன 14, 2024 11:38 PM

பெங்களூரு: கடந்த சட்டசபை தேர்தலில், சீட் கிடைக்காமல் பா.ஜ.,வை விட்டு விலகி, காங்கிரசில் இணைந்து பெரும் சலசலப்பை ஏற்படுத்திய முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், மீண்டும் பா.ஜ.,வை நோக்கி பார்வையை திருப்பியதாக, தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில், ஹூப்பள்ளி - தார்வாட் தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர், சீட் எதிர்பார்த்தார். ஆனால், புதியவர்களுக்கு மேலிடம் வாய்ப்பளித்ததால், கொதிப்படைந்த அவர் பா.ஜ.,வுக்கு முழுக்கு போட்டு, காங்கிரசில் இணைந்து போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். அதன்பின் இவரை எம்.எல்.சி.,யாக காங்., மேலிடம் தேர்வு செய்தது.
அதிக எதிர்பார்ப்புடன், காங்கிரசில் இணைந்த ஷெட்டருக்கு, இங்குள்ள சூழ்நிலையில் தன்னை பொருத்திக்கொள்ள முடியவில்லை. இதனால் மீண்டும் பா.ஜ.,வுக்கு திரும்ப ஆர்வம் காண்பிக்கிறார். கட்சியின் முக்கிய தலைவருடன் பேச்சு நடத்தியதாக, தகவல் வெளியாகியுள்ளது.
ஷெட்டரை பா.ஜ.,வுக்கு அழைத்து வர, மாநில தலைவர் விஜயேந்திரா, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆர்வம் காண்பிக்கின்றனர். மூன்று நாட்களுக்கு முன், பெங்களூரு புறநகரில் நடந்த முக்கிய தலைவர்கள் கூட்டத்தில், ஷெட்டரை பா.ஜ., வுக்கு அழைத்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கு பலரும் சம்மதம் தெரிவித்தனர்.
ஷெட்டர் பா.ஜ.,வுக்கு வந்தால், அவரை இம்முறை லோக்சபா தேர்தலில், பெலகாவி தொகுதி வேட்பாளராக்க கட்சி ஆலோசிக்கிறது. தொகுதியின் இன்னாள் எம்.பி., மங்களா அங்கடி, மீண்டும் போட்டியிட தயக்கம் காண்பிக்கிறார்.
பெலகாவி தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேஷ் அங்கடி, திடீர் மறைவால் தொகுதி காலியானது. இங்கு நடந்த இடைத்தேர்தலில், அவரது மனைவியை பா.ஜ., களமிறக்கியது. அவர் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
எம்.பி.,யான பின், தொகுதியில் அவ்வளவாக பணியாற்றவில்லை. எனவே இம்முறை அவருக்கு சீட் தரக்கூடாது என, பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், மாற்று வேட்பாளரை தேடும் பா.ஜ.,வுக்கு, ஷெட்டர் வருகை அனுகூலமாக இருக்கும். அவரை களமிறக்கினால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பில்லை. இதை மனதில் கொண்டு, ஷெட்டருக்கு வலை விரித்துள்ளது.
இது குறித்து, ஹூப்பள்ளியில் ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று கூறியதாவது:
பா.ஜ.,வுக்கு திரும்பும்படி எனக்கு நெருக்கடி தரப்படுகிறது. எனக்கு நடந்த அவமானத்தால், அந்த கட்சியை விட்டு வெளியேறினேன். மீண்டும் செல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என, கூறியுள்ளேன். பா.ஜ., முக்கிய தலைவர்கள் யாரும், என்னை தொடர்பு கொள்ளவில்லை.
ராமர் கோவில் அரசியல் விஷயமாக கூடாது. அரசியல் தர்மம் இருக்க வேண்டும். ஆனால், தர்மத்தில் அரசியல் இருக்க கூடாது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பது, அனைவரின் விருப்பமாகும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின், ராமர் கோவில் கட்டப்பட்டது. இது மகிழ்ச்சியான விஷயமாகும்.
ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு, சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு அழைப்பு விடுக்கவில்லை.
இதுபோன்று பாரபட்சம் ஏன். ராமர் கோவிலுக்கு யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் செல்வர். இதில் அரசியல் ஏன்?
ஜனவரி 22ல், நிகழ்ச்சிக்கு வரும்படி அழைப்பு விடுத்தது பா.ஜ.,வினர் அல்ல. ராமர் கோவில் டிரஸ்ட்டினர் அழைப்பு விடுத்தனர். யாருக்கு அழைப்பு விடுக்க வேண்டும், யாருக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என, முடிவு செய்யும் அதிகாரம், அவர்களுக்கு உள்ளது.
நிகழ்ச்சிக்கு செல்லமாட்டோம் என, காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். ஆனால் புறக்கணிப்பதாக கூறவில்லை. யாரும் செல்ல கூடாது என, கூறவில்லை. எனக்கும் அழைப்பு கடிதம் வந்துள்ளது. ஆனால், நான் செல்ல மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.