ரூ.24 கோடி மதிப்புள்ள நகை மஹாராஷ்டிராவில் பறிமுதல்
ரூ.24 கோடி மதிப்புள்ள நகை மஹாராஷ்டிராவில் பறிமுதல்
ADDED : நவ 03, 2024 12:15 AM

மும்பை: மஹாராஷ்டிராவில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்து வரப்பட்ட, 24 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள், வரும் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மாநிலம் முழுதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் கமிஷன் சார்பில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அஹில்யாநகர் மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடி அருகே பறக்கும் படையினர் வாகனங்களை சோதனையிட்டனர். அப்போது ஜாவேரி பஜாரில் இருந்து வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இதில், உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 24 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக நகைகளை எடுத்து வந்த மூன்று பேரிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.