ADDED : ஜன 19, 2025 06:55 AM
ஹலசூரு கேட்: நகைக்கடையில் இருந்த 8 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளுடன், ஊழியர் மாயமானதாக போலீசில் உரிமையாளர் புகார் செய்துள்ளார்.
பெங்களூரு ஹலசூரு கேட் பகுதியில் விக்ரம் ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடை உள்ளது. இந்த நகை கடையின் உரிமையாளர் விக்ரம் காரியா.
இவரது கடையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் சர்மா என்பவர், நான்கு ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
விக்ரமிடம், நரேஷ் நல்ல பெயர் வாங்கி இருந்தார். இதனால் நகைகளை, மற்ற நகைக் கடையில் விற்று பணத்தை வாங்கி வரும் பொறுப்பை நரேஷிடம், விக்ரம் கொடுத்திருந்தார்.
கடந்த 8ம் தேதி தமிழகத்தின் கோவையில் உள்ள பல்வேறு நகைக்கடைகளில் விற்பனை செய்வதற்காக, நகைகளை விக்ரம் எடுத்துச் சென்றிருந்தார்.
இதனால் ஜுவல்லரியின் சாவியை நரேஷிடம் கொடுத்தார். 15ம் தேதி விக்ரம் பெங்களூரு திரும்பினார். ஜுவல்லரி திறக்கப்படவில்லை. நரேஷின் மொபைல் நம்பருக்கு அழைத்தபோது 'சுவிட்ச் ஆப்' என்று வந்தது.
மாற்று சாவியை பயன்படுத்தி ஜுவல்லரியை திறந்து பார்த்தபோது 9 கிலோ 462 கிராம் நகையுடன் நரேஷ் மாயமானது தெரிந்தது. அதன் மதிப்பு 8 கோடி ரூபாய்.
இதுகுறித்து 16ம் தேதி ஹலசூரு கேட் போலீசில் விக்ரம் புகார் செய்தார். நரேஷை கண்டுபிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.