ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு; பூமராங் ஆனது பா.ஜ., பிரசாரம்!
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு; பூமராங் ஆனது பா.ஜ., பிரசாரம்!
UPDATED : நவ 23, 2024 01:32 PM
ADDED : நவ 23, 2024 01:04 PM

ராஞ்சி; ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் கருத்துக்கணிப்புகளை அப்படியே ஓரங்கட்டி காங்., ஜே.எம்.எம்., கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்து ஆச்சரியம் காட்டி உள்ளனர்.
மற்ற மாநிலங்களை விட இயற்கை வளங்களில் முன்னிலையிலும், மக்கள் வாழ்க்கை தரத்தில் சற்றே பின்தங்கியும் காணப்படும் மாநிலம் ஜார்க்கண்ட். அரசியல் களத்தில் இம்மாநிலத்துக்கு என்று பல்வேறு காலநிலைகள் உள்ளது.
இம்மாநிலத்தின் முதல்வராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் சட்ட விரோத பணபரிவர்த்தனை விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். முதல்வர் நாற்காலியை இழந்தார். சிறையிலும் அடைக்கப்பட்டார். நீண்ட போராட்டத்திற்கு பின்னர், முதல்வர் பதவியில் அமர்ந்தார். சிறையில் இருந்த காலத்தில் அவரின் இடத்தில் அவரது அதி தீவிர ஆதரவாளரான சம்பாய் சோரன் முதல்வராக அமர வைக்கப்பட்டார்.
அவர் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று வெளியில் வந்த நிலையில், தமது ஆதரவாளர்களுடன் சம்பாய் சோரன், பா.ஜ.,வில் ஐக்கியமானார். முதல்வர் பதவி நாற்காலிக்கான சண்டையே இதற்கு காரணம் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், எதை பற்றியும் கவலை கொள்ளாமல் மீண்டும் ஹேமந்த் சோரன், ஆட்சியை தொடர்ந்தார்.
சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்கள் முன்பாக முதல்வர் நாற்காலியை வைத்து, நடைபெற்ற ஆடுபுலி ஆட்டங்களை மக்கள் நன்றாக கண்டிருந்தனர். எனவே நாற்காலி சண்டையின் எதிரொலியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மண்ணை கவ்வும், பாஜ., அசால்ட்டாக அரியணை ஏறும் என்றெல்லாம் அரசியல் விமர்சகர்கள் கருத்துகள் கூறி இருந்தனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் அப்படியே தான் கூறின.
ஆனால், பா.ஜ., கூட்டணியை மக்கள் லெப்ட் ஹேண்டில் டீல் செய்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வெற்றியை அளித்து உள்ளனர். கனிம வளங்கள் அதிகம் கொண்ட இம்மாநிலத்தில் பழங்குடியின மக்களின் எண்ணிக்கை அதிகம். கிட்டத்தட்ட ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 27 சதவீதம் ஓட்டுகள் பழங்குடியின மக்கள் வசம் உள்ளது. அவர்களின் ஆதரவு பெற்றவர்களால் மட்டுமே ஆட்சியில் அமர முடியும் என்ற நிலை இப்போதும் உள்ளது.
இதனால் ஹேமந்த் சோரனுக்கு எதிராக பா.ஜ., மேற்கொண்ட செயல்பாடுகள், பிரசாரம் ஆகியவை, அக்கட்சிக்கு எதிராக பூமராங் ஆக திரும்பி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒட்டு மொத்தமாக உள்ள 28 பழங்குடியின தொகுதிகளில் 3ல் 2 பங்கு தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவை அளித்து இருக்கின்றனர். இதனால் ஜே.எம்.எம்., தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி, மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.