ADDED : ஜன 09, 2025 06:49 AM

பெங்களூரில் பூங்கா என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது லால்பாக்; அதன் பின், கப்பன் பூங்கா. ஆனால், நான்கு ஏரிகள் கொண்ட பூங்கா நகருக்குள் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
லால்பாக், கப்பன் பார்க்கிற்கு அடுத்தபடியாக பெரிய பூங்காவாக இருப்பது ஜே.பி., பல்லுயிர் பூங்கா. பெங்களூரு நகரின் வடமேற்கு திசையில், 85 ஏக்கரில் அமைந்துள்ளது.
இங்கு பூங்கா அமைக்க, முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. பல்வேறு காரணங்களால், பத்து ஆண்டுகள் ஆமை வேகத்தில் பணிகள் நடந்தன. குமாரசாமி முதல்வராக இருந்தபோது, 2006ல் இப்பூங்காவை திறந்து வைத்தார்.
இங்கு 25 ஏக்கரில் புல் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 250க்கும் மேற்பட்ட மரங்கள், செடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் நான்கு ஏரிகள் உள்ளன. இயற்கை மையம், கண்காட்சி பகுதி, பாறை தோட்டம் அமைந்துள்ளன.
பாறை தோட்டத்தில் நடக்கும் பகுதிகள் அனைத்தும் சிறிய கற்களால் பதிக்கப்பட்டு உள்ளன. இங்கு நீங்கள் வெறும் காலில் நடக்கும் போது, 'அக்குபஞ்சர்' செய்ததற்கான நிவாரணம் கிடைக்கும்.
பாறை தோட்டம் என்றால், பெரிய பெரிய கற்கள் இருக்கும் என நினைக்க வேண்டாம். சிறு கற்களால் நடைபாலம், நாற்காலி என பல வடிவங்களில் கட்டப்பட்டு உள்ளன. அதை தொடர்ந்து, மூங்கில் தோட்டம் அமைந்துள்ளது. இங்கு பலரும், 'பிரீ வெட்டிங் போட்டோ ஷூட்' நடத்துகின்றனர்.
நட்சத்திர வனம், ராசி வனம், நவக்கிரஹ வனம் என மூன்று பிரிவுகள் கொண்ட பவித்ர வனம் உள்ளது. நட்சத்திரங்களின் ராசிக்கு ஏற்ப, ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு குறிப்பிட்ட செடி, மரம் உள்ளது.
குழந்தைகளுக்கு பிடித்தமான குரங்கு, மான், சிங்கம், சிறுத்தைகள் சிற்பங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
அதுபோன்று, கிராமத்து நபர் மாட்டு வண்டியில் செல்வது, ஏர் உழுவது, பெண்கள் அரட்டை அடித்து கொண்டிருப்பது போன்றும், கணவன் - மனைவி தங்கள் குழந்தையுடன் இருப்பது போன்று என பல வடிவங்களில் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும், 1,500 பேர் அமர்ந்து இசை செயற்கை நீரூற்று பார்க்கக் கூடிய அளவில் திறந்தவெளி அரங்கம், குழந்தைகள் விளையாட்டு பகுதி, ராமகிருஷ்ண ஹெக்டே நீச்சல் குளம், மூங்கில் தோட்டம், உடற்பயிற்சி பகுதி, உணவு பகுதி, தீவு ஆகியவை உள்ளன.
பூங்காவை சுற்றி பார்க்க, பொம்மை ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி நடந்து வருகின்றன. விரைவில் பணி முடிந்து, பெரியவர்கள், சிறியவர்கள் இந்த ரயிலில் பயணிக்கலாம். மாலை நேரத்தில் செல்லும் போது, பூங்காவில் சில மரங்கள் வண்ண விளக்குகளால் ஜொலிப்பதை காணலாம்.
இங்கு பெரிய அளவில் 15 ஏக்கரிலும், 9 ஏக்கரிலும் இன்னும் இரண்டு ஏரிகள் என நான்கு ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் அவ்வப்போது வெளிநாட்டு பறவைகளும் தஞ்சம் அடைகின்றன.
தினமும் அதிகாலை 5:00 முதல் 9:00 மணி வரையும்; மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் பூங்கா திறந்திருக்கும். நுழைவு கட்டணம் இல்லை.
9_Article_0001, 9_Article_0002, 9_Article_0003, 9_Article_0004, 9_Article_0005
ஜெயபிரகாஷ் நாராயண் பல்லுயிர் பூங்கா நுழைவு வாயில். (2வது படம்) பாறைகள் தோட்டம். (3வது படம்) வெளிநாட்டு பறவைகள் ஓய்வெடுக்கும் ஏரி. (4வது படம்) விவசாயி, மாடுகளுடன் ஏர் உழும் சிலை. (கடைசி படம்) குழந்தைகள் விளையாட்டு பகுதி.

