அரசியலமைப்பு உருவாக்கத்தில் பிராமணர்கள் பங்கு: அம்பேத்கரை சுட்டிக்காட்டிய நீதிபதி
அரசியலமைப்பு உருவாக்கத்தில் பிராமணர்கள் பங்கு: அம்பேத்கரை சுட்டிக்காட்டிய நீதிபதி
UPDATED : ஜன 22, 2025 03:59 AM
ADDED : ஜன 22, 2025 12:24 AM

பெங்களூரு: அரசியலமைப்பை உருவாக்கியதில் பிராமணர்களின் பங்களிப்பை அம்பேத்கர் வெகுவாக பாராட்டியதாக, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சுட்டிக் காட்டினார்.
கர்நாடக பிராமண மகாசபாவின் பொன்விழாவை முன்னிட்டு, கர்நாடகாவின் பெங்களூரில், 'விஸ்வமித்ர' என்ற பெயரில் பிராமணர்களின் இரண்டு நாள் மாநாடு நடந்தது.
இதில் பங்கேற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண தீட்சித் பேசியதாவது: நம் நாட்டின் அரசியலமைப்பை உருவாக்கிய குழுவில் ஏழு பேர் இடம்பெற்றிருந்தனர். அதில், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், என்.கோபாலசாமி அய்யங்கார், பி.என்.ராவ் ஆகிய மூவரும் பிராமணர்கள்.
அரசியலமைப்பை உருவாக்கியதில் அவர்களுடைய பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய அம்பேத்கர், 'பி.என்.ராவ் மட்டும் வரைவை உருவாக்காவிட்டால், அரசியலமைப்பு தயாராவதற்கு, இன்னும் 25 ஆண்டுகளாகியிருக்கும்' என, குறிப்பிட்டார்.
பிராமணர்கள் என்ற வார்த்தையை ஒரு -ஜாதியாக பார்ப்பதைவிட, வர்ணாசிரம தர்மத்துடன் பார்க்க வேண்டும். வேதங்களை தொகுத்த வேதவியாசர், மீனவப் பெண்ணின் மகன்; ராமாயணத்தை இயற்றிய வால்மீகி, எஸ்.சி., அல்லது எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவர். ஆனால், இவர்களை கீழானவர்களாக பிராமணர்கள் பார்த்தது இல்லை. ஹிந்து கடவுளான ராமரின் கருத்துக்கள், நம் அரசியலமைப்பிலும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு நீதிபதி ஸ்ரீசானந்தா, “மக்கள் கல்வி, உணவுக்காக போராடும்போது, இதுபோன்ற பிரமாண்ட நிகழ்ச்சிகள் தேவையா என்று விமர்சிக்கின்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளே சமூகத்தினர் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதுடன், பிரச்னைகள் குறித்தும் பேச வைக்கிறது,” என குறிப்பிட்டார்.