மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்
ADDED : ஏப் 06, 2025 11:04 PM
மும்பை: மஹாராஷ்டிராவில், 2008 மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் விசாரணை நடத்தி வந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கே.லஹோட்டி, விரைவில் தீர்ப்பு அளிக்கவிருந்த நிலையில், திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற இடத்தில், 2008 செப்., 29ல் குண்டு வெடித்ததில், ஆறு பேர் உயிரிழந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக, பா.ஜ., பிரமுகர் பிரக்யா தாக்குர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உள்ளிட்ட ஐந்து பேர் மீது, சட்ட விரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
மும்பையில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை, 17 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்த வழக்கை நீதிபதி ஏ.கே.லஹோட்டி விசாரித்து வந்தார்.
விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிபதி ஏ.கே.லஹோட்டி, நாசிக் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுஉள்ளார்.
இவர் உட்பட பல மாவட்ட நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

