ஆர்.எஸ்.எஸ்., விழா அழைப்பை புறக்கணிக்கிறார் நீதிபதியின் தாய்?
ஆர்.எஸ்.எஸ்., விழா அழைப்பை புறக்கணிக்கிறார் நீதிபதியின் தாய்?
ADDED : செப் 30, 2025 03:36 AM

மும்பை: மஹாராஷ்டிராவின் அமராவதியில் அடுத்த வாரம் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்., விஜயதசமி விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் தாய் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் இல்லாத நபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
அந்த வகையில், வரும் அக்., 5ம் தேதி, மஹாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு மற்றும் விஜயதசமி விழா நடத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்கும்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் தாய் கமல்டாய் கவாய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் விருப்பம் தெரிவித்திருந்ததால், அழைப்பிதழில் சிறப்பு விருந்தினராக அவரது பெயர் அச்சடிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., விழாவில் அவர் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசுடன் நெருங்கிய உறவில் இருக்கும் அமைப்பின் நிகழ்ச்சியில், நாட்டின் தலைமை நீதிபதியின் தாய் பங்கேற்பதா என சர்ச்சை எழுந்ததால், இந்த மனமாற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் ஒரு வழக்கின்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், 'சிலையை புதுப்பிக்க, பகவான் விஷ்ணுவிடமே பிரார்த்தனை செய்யுங்கள்' என கருத்து கூறியிருந்தார்.
இது, ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக, ஹிந்து அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் விமர்சித்தது.
ஆர்.எஸ்.எஸ்., விஜயதசமி விழாவை புறக்கணிக்க அவர் முடிவெடுத்ததற்கு, இதுவும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. கமல்டாயின் கணவர் கவாய், 1981ல் நடந்த ஆர்.எஸ்.எஸ்., விஜயதசமி விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றியவர்.
இந்நிலையில், தன் முடிவில் இருந்து கமல்டாய் பின்வாங்கியது குறித்து ஆர்.எஸ்.எஸ்., கூறியதாவது:
அனைத்து இந்தியர்களும் எங்களின் சொந்தம் தான். பிற சித்தாந்தங்கள் கொண்டவர்களும் எங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறோம். கடந்த காலங்களில் கூட பல்வேறு சித்தாந்தங்களை கொண்டவர்களை அழைத்து இருக்கிறோம். அவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை ஆற்றி இருக்கின்றனர்.
இவ்வாறு ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் கூறப்பட்டுள்ளது.