ADDED : ஜன 03, 2024 02:14 AM

புதுடில்லி; அதானி குழும் ஹிண்டன்பர்க் நிறுவனம் தொடர்பான வழக்கில் இன்று (ஜன.03) உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் நிறுவனம், அதானி குழுமம். இந்நிறுவனம், துறைமுகம், எரிசக்தி மற்றும் உணவுப்பொருள் உட்பட பல்வேறு தொழில்துறைகளில் இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல அயல்நாடுகளிலும் வர்த்தகம் செய்து, பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவராக கவுதம் அதானி (61) உள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவை சேர்ந்த நிதி முதலீட்டு ஆராய்ச்சியில் புகழ் பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்.எல்.சி., எனும் நிறுவனம், இந்தியாவின் அதானி குழுமம் கணக்குகளில் முறைகேடுகளை செய்து பொய்யாக வெளியிட்டு வருவதாகவும், நிறுவன கடன்களை பெருமளவு மறைத்து இருப்பதாகவும், இதனால் பங்கு சந்தையில் தனது முதலீட்டாளர்களுக்கு உண்மையான தகவல்களை மறைத்த குற்றத்தை புரிந்ததாகவும் பெரும் குற்றச்சாட்டை வைத்தது.
இந்த செய்தி வெளியானவுடன் அதானி நிறுவன பங்குகள் இந்திய பங்கு சந்தைகளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.