ADDED : பிப் 01, 2024 06:47 AM

ஆன்மிகம், வரலாறு, டிரெக்கிங் பல முகங்களை ஒரே இடத்தில் காண வேண்டுமா. அப்படியென்றால், உங்கள் உடமைகளை எடுத்து கொண்டு கைவாரா மலைக்கு செல்லுங்கள்.
ஆம். பெங்களூரில் இருந்து 60 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது கைவாரா மலை. சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணியில் அமைந்துள்ள கைவாரா மலை, மலையேற்றத்துக்கு மிகவும் பொருத்தமானது.
ஷாமரஹோசப்பேட்டை கிராமத்தில் உள்ள உயிரியல் பூங்காவான கைவார தபோவனத்தின் பிரதான வாயிலில் துவங்கி, மைலாபுரபெட்டாவில் மலையேற்றத்துடன் முடிவடைகிறது.
பெரிய பாறைகள், செங்குத்தான, கடினமான நிலப்பரப்பை இந்த மலையேற்றத்தின் போது உணர முடியும். மலையின் உச்சியை அடைய, 2 - 3 மணி நேரமாகும். பாறைகள் நிறைந்த மலையாக இருந்தாலும், இடையில் நீங்கள் ஓய்வெடுக்க, நிழல் கொடுக்கும் பசுமையான மரங்களும் உள்ளன. அதேவேளையில், கீழே இறங்குவது மிகவும் கடினமானதாக இருக்கும்.
ஆன்மிகம்
அதுமட்டுமின்றி, இந்த இடம் பல கோவில்கள், வரலாற்று தலங்களுக்கு தாயகமாக உள்ளது. இது உண்மையிலேயே புராண முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புனித யாத்திரையாகும். கர்நாடகாவின் சிறந்த இரு மொழி கவிஞரான ஸ்ரீயோகி கைவார நாராயண தத்தாவுக்கு பிரபலமானது.
அவர், கைவார மலையில் தியானம் செய்ததாகவும், அதனால் இப்பெயர் வந்தது என்றும் நம்பப்படுகிறது.
கைவாராவில் ராமாயணம், மஹாபாரதத்துடன் இணைக்கப்பட்ட பல்வேறு கதைகளும் உள்ளன. ஒரு சிறிய உயிரியல் பூங்கா மற்றும் ஒரு தேசிய பூங்கா ஆகியவை, வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது.
புராணங்களில் குறிப்பாக, ராமாயணம், மஹாபாரதத்தை நம்புபவர்களுக்கு இந்த இடம் நிச்சயம் பொருத்தமானது.
முன்பதிவு
கர்நாடக அரசின் வனத்துறையால் இம்மலை நிர்வகிக்கப்படுகிறது. இங்கு மலையேற்றம் செய்ய விரும்புவோர், karnatakatourism.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
முதன் முறையாக டிரெக்கிங் செல்பவர்களுக்கு இது உகந்ததல்ல. ஏனெனில், இங்கு பாறைகள், அடர்ந்த பகுதி, வளைவு, நெளிவுகள் நிறைந்த பாதையாக இருக்கும். எனவே, உதவியாளர் இன்றி தனியாக செல்ல முடியாது.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து ஹொஸ்கோட் வழியாக அல்லது பெங்களூரில் இருந்து தேவனஹள்ளி வழியாக கைவாரா செல்லலாம். காலையில் டிரெக்கிங் செல்ல வேண்டுமானால், 11 கி.மீ., தொலைவில் உள்ள சிந்தாமணியில் இரவு தங்க வேண்டும்.
பெங்களூரில் இருந்து சிக்கபல்லாபூர் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். அங்கிருந்து பஸ், டாக்சிகள் மூலம் செல்லலாம்.
சிந்தாமணியில் தங்க கோவில் சத்திரங்களும், ஹோட்டல்களும் உள்ளன. வெயிலின் தாக்கத்தை தவிர்க்க, டிசம்பர் முதல் மார்ச் வரை மற்றும் ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் இங்கு செல்வது நல்லது.
டிரெக்கிங் செல்லும் ஒருவருக்கு 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மலையில் உணவு கிடைக்காது. எனவே, நீங்களே உணவு, தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும். இயற்கை உபாதை கழிக்க கழிப்பறைகள் இல்லை என்பது பெரும் குறை.
- நமது நிருபர் -