ADDED : மார் 21, 2024 03:39 AM

காங்கிரஸ் மேலிட தலைவி சோனியா சம்மதித்தால் மட்டுமே, கலபுரகி லோக்சபா தொகுதியில் போட்டியிட, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்துள்ளார்.
கலபுரகி ஒருகாலத்தில் காங்கிரசின் கோட்டையாக இருந்தது. லோக்சபா தொகுதியில் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தொடர்ந்து ஏழெட்டு முறை வெற்றி பெற்றுள்ளார். 2019 லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சியாக இருந்த ம.ஜ.த., ஆதரித்தும் கார்கே தோற்றார்.
மோடி அலை, உட்கட்சி பூசல், அதிருப்தி தலைவர்களின் உள்குத்து வேலையால், 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில், அவர் தோல்வியடைந்தார். பா.ஜ.,வின் உமேஷ் ஜாதவ் வெற்றி பெற்றார். இம்முறையும் அவரே பா.ஜ., வேட்பாளராக களத்தில் உள்ளார். காங்., வேட்பாளர் இன்னும் முடிவாகவில்லை. மல்லிகார்ஜுன கார்கேவை களமிறங்குவார் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இவர் கட்சியின் தேசிய தலைவராக இருப்பதால், பல மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து, கட்சியை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே போட்டியிட மறுத்தார்.
ஐ.டி., - பி.டி., துறை அமைச்சரும் மல்லிகார்ஜுன கார்கே மகனுமான பிரியங்க் கார்கேவை களமிறக்க, மாநில தலைமை விரும்பியது. அவரும் மறுத்துள்ளார். அதனால் இந்த தொகுதிக்கு வேட்பாளரை தேர்வு செய்வது, மேலிடத்துக்கு தலைவலியாக உள்ளது.
தகுதியான வேட்பாளர் கிடைக்காவிட்டால், மல்லிகார்ஜுன கார்கேயே களமிறங்க வாய்ப்புள்ளது. மேலிட தலைவி சோனியா உத்தரவிட்டால், கலபுரகியில் வேட்பாளராக கார்கே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதாவது:
மல்லிகார்ஜுன கார்கே, 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார். சோனியாவுடன் ஆலோசிக்க வேண்டும். மத்திய தேர்தல் கமிட்டி கூட்டத்தில், என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதற்கு நாங்கள் தலை வணங்குவோம்.
கார்கேவும் மேலிட தலைவர்தான். இவர் சோனியா, ராகுலுடன் ஆலோசிப்பார். அதன்பின் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்
.- நமது நிருபர் -

