மாமியாராகிறார் காங்., பிரியங்கா; மகனுக்கு இன்று நிச்சயதார்த்தம்
மாமியாராகிறார் காங்., பிரியங்கா; மகனுக்கு இன்று நிச்சயதார்த்தம்
UPDATED : டிச 31, 2025 03:20 AM
ADDED : டிச 31, 2025 03:19 AM

புதுடில்லி: காங்., - எம்.பி., பிரியங்காவின் மகன் ரெய்ஹன், 25. வாத்ராவுக்கும், அவரது நீண்ட கால பெண் தோழி அவிவாவுக்கும் இன்று ராஜஸ்தானில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா. லோக்சபா காங்., - எம்.பி.,யான இவர், தொழிலதிபர் ராபர்ட் வாத்ராவை திரு மணம் செய்துள்ளார்.
இத்தம்பதியின் மகன் ரெய்ஹன் வாத்ராவுக்கும், டில்லியை சேர்ந்த நந்திதா பெய்க் மகள் அவிவாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடக்கவுள்ளது. 
பிரியங்காவும், நந்திதா பெய்க் குடும்பமும் நீண்ட காலமாக நட்பாக பழகி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளாக அவிவாவுடன் நெருங்கி பழகி வந்த ரெய்ஹன் நேற்று முன் தினம் இருவீட்டார் முன்னிலையில், தன் காதலை வெளிப்படுத்தினார்.
அதை ஏற்பதாக அவிவா, 25, அறிவிக்க, இரு குடும்பத்தாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து, ராஜஸ்தானின் ரந்தம்போர் நகரில் இன்று பிரமாண்ட நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கவனிக்க, தாய்மாமனான லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், நேற்றே ராஜஸ்தான் சென்றார்.
பிரியங்காவுக்கு மருமகளாக வரும் அவிவாவின் தந்தை இம்ரான் பெய்க், தொழிலதிபர். தாய் நந்திதா பெய்க், 'இன்டீரியர் டிசைனர்' எனப்படும் கட்டடங்களின் உட்புற வடிவமைப்பாளர்.
பிரியங்காவின் நீண்டகால தோழி என்பதால், காங்., தலைமை அலுவலகத்தில் உட்புற அலங்கார பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு நந்திதாவுக்கு கிடைத்தது.
ராஜஸ்தானில் நிச்சயதார்த்த நிகழ்ச்சியுடன், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் பிரியங்கா குடும்பம் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

