அடுத்த தலைமுறை துருவ் ஹெலிகாப்டர் அறிமுகம்; நம் விமான தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்
அடுத்த தலைமுறை துருவ் ஹெலிகாப்டர் அறிமுகம்; நம் விமான தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்
ADDED : டிச 31, 2025 03:04 AM

பெங்களூரு: முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே உருவான அடுத்த தலைமுறை, 'துருவ்' ஹெலிகாப்டரை விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேற்று அறிமுகம் செய்தார்.
இந்த ஹெலிகாப்டரை கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் உருவாக்கி உள்ளது. விமான போக்குவரத்து சேவை சாமானிய மக்களை எட்டும் லட்சியத்துடன், அதிநவீன திறனுடன் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்த ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சமவெளி, மலைப்பகுதிகள், வனப்பகுதிகள் என நம் நாட்டின் பன்முக நிலப்பரப்புகளில் துருவ் ஹெலிகாப்டரை திறம்பட பயன்படுத்த முடியும். ராஜஸ்தான் பாலைவனம், பருவமழை தவறாது பொழியும் மேற்கு தொடர்ச்சி மலை, ஆக்சிஜன் குறைவான லடாக் பனிமலை என, எந்தப் பகுதிக்கும் இந்த ஹெலிகாப்டர் விரைவாக செல்லும்.
இமயமலையின் பனிபடர்ந்த பகுதிகளை ரசிக்க மட்டுமின்றி, குக்கிராமத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையை மருத்துவ அவசர உதவிக்காக நகரத்துக்கு அழைத்துச் செல்லவும், 'ஏர் ஆம்புலன்ஸாக' இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்த முடியும். சர்வதேச விமான போக்குவரத்து சந்தைக்கு தேவையான பாதுகாப்பு தரத்துடன், நம் மண்ணில் துருவ் ஹெலிகாப்டர் உருவாக்கப்பட்டு உள்ளது.

