சீக்கியர் எதிர்ப்பால் சிக்கல்; சர்ச்சை காட்சிகள் நீக்க சம்மதம் தெரிவித்தார் கங்கனா!
சீக்கியர் எதிர்ப்பால் சிக்கல்; சர்ச்சை காட்சிகள் நீக்க சம்மதம் தெரிவித்தார் கங்கனா!
ADDED : அக் 01, 2024 07:32 AM

புதுடில்லி: 'எமர்ஜென்சி' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க நடிகை கங்கனா ரனாவத் சம்மதம் தெரிவித்தார். ஆனால் அவர் சர்ச்சை காட்சிகளை நீக்க கால அவகாசம் கோரியுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்திய போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வரலாற்றை மையமாக கொண்டு எமர்ஜென்சி என்ற பெயரில் படத்தை தயாரித்து பிரபல நடிகை கங்கனா ரனாவத் இயக்கி உள்ளார். செப்டம்பர் 6ம் தேதி படத்தின் ரிலீஸ் தேதி என்று அறிவிக்கப்பட்டது. படத்தில் சீக்கிய சமூகத்தை தவறாக சித்தரித்ததாக பெரும் சர்ச்சை எழுந்த நிலையில் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சீக்கிய அமைப்பினர் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மத்திய தணிக்கை குழு படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தணிக்கை குழு சார்பில் ஆஜரான வக்கீல், 'எமர்ஜென்சி' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க நடிகை கங்கனா ரனாவத் சம்மதம் தெரிவித்தார். காட்சிகளை நீக்குவதால் படத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என தெரிவித்தார்.
இதையடுத்து, படக்குழு சார்பில் ஆஜரான வக்கீல், 'சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதை உறுதி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்' என நீதிபதிகளிடம் கேட்டார். பின்னர் மனு மீதான விசாரணையை அக்டோபர் 3ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.