ADDED : அக் 09, 2024 05:23 AM

பெங்களூரு : பெங்களூரில் காங்கிரசார் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு.க., - எம்.பி., கனிமொழி, கர்நாடக தி.மு.க.,வினரை அலட்சியம் செய்ததாக விமர்சனம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் தி.மு.க., உதயமான போதே கர்நாடகாவிலும் உருவானது. அண்ணாதுரை வகுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற லட்சியத்தை பின்பற்றி வருவதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த கொள்கை, காலத்தால் அழியாமல் வேரூன்றியிருப்பதாக அக்கட்சி செயல்வீரர்களின் எண்ணம்.
கர்நாடகாவுக்கு வரும்போது, அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர், இங்குள்ள மாநில தலைமைக்கு தெரிவித்துவிட்டுத் தான் வருவர். இந்த செயல்பாடு, கட்சி செயல் வீரர்களுக்கு 'பூஸ்ட்' கொடுத்தது போல் இருக்கும்.
தி.மு.க., மாநில அமைப்பாளராக இருந்த எஸ்.வி.பதி, இளஞ்சேரன், திராவிட மணி, சோழன், வி.டி.சண்முகம், கிள்ளி வளவன், ராமசாமி ஆகியோர், தி.மு.க. தலைமை வந்து செல்லும் வரை, அவர்களுக்கு படை தளபதியாக இருப்பர்.
ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், எம்.பி.,யுமான கனிமொழி, நேற்று பெங்களுரில் காங்கிரசார் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர்கள் அளித்த 'கிருஷ்ண பகவான்' சிலையை பெற்றுள்ளார்.
ஆனால், அவரின் வருகை குறித்து மாநில தி.மு.க., நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் எந்த தி.மு.க.,வினரும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

