ஒரு மாணவர் இருந்தாலும் அரசு பள்ளியை மூடக்கூடாது கன்னட இலக்கிய மாநாட்டில் வலியுறுத்தல்
ஒரு மாணவர் இருந்தாலும் அரசு பள்ளியை மூடக்கூடாது கன்னட இலக்கிய மாநாட்டில் வலியுறுத்தல்
ADDED : டிச 23, 2024 07:00 AM

மாண்டியா: ''மாணவர் இருந்தாலும், அரசுப் பள்ளியை மூடாமல் நடத்த வேண்டும். துவக்கப் பள்ளி முதல் 10ம் வகுப்பு வரை கன்னட கல்வியை கட்டாயமாக்க வேண்டும்,'' என கன்னட இலக்கிய மாநாடு தலைவர் சென்ன பசப்பா தெரிவித்தார்.
மாண்டியாவில் 87வது அகில இந்திய கன்னட இலக்கிய மாநாட்டில், இலக்கியவாதி சென்ன பசப்பா பேசியதாவது:
சலுகை
வெளி மாநிலங்களில் இருந்து வருவோர், முதலில் கன்னடம் கற்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் உட்பட பல்வேறு இடங்களில் எளிமையாக கன்னட பயிற்சி மையங்களை, கன்னட மேம்பாட்டு வாரியம் துவங்கவுள்ளது.
கன்னட மண்ணில் அனைத்து சலுகைகளையும் பெற்று, லாபகரமாக செயல்படும் தொழில் நிறுவனங்கள், கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பளித்து, மாநிலத்துக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும். இது அவற்றின் பொறுப்பு.
தனி வசதி
தேவையான இடங்களில், ஆங்கிலம் கற்க தனி வசதி செய்யுங்கள். பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதே நேரத்தில் கன்னட பள்ளிகளின் வளர்ச்சியும் அவசியம்.
மருத்துவமனையில் ஒரேயொரு நோயாளி இருந்தாலும், அவருக்கு சிகிச்சை அளிப்பது போன்று, ஒரு மாணவர் இருந்தாலும், அரசுப் பள்ளியை மூடாமல் நடத்த வேண்டும். துவக்கப் பள்ளி முதல் 10ம் வகுப்பு வரை கன்னட கல்வியை கட்டாயமாக்க வேண்டும்.
கிராமப்பகுதியில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளின் கூரை, சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இவற்றை முதலில் சரி செய்து, மாணவர்கள், அவர்களின் பெற்றோரை ஈர்க்கும்படி தரம் உயர்த்த வேண்டும்.
பெற்றோர் எண்ணம்
ஆசிரியர்கள் பற்றக்குறையால், அரசுப் பள்ளிகளை தவிர்த்து வேறொரு பள்ளிகளில் மாணவர்கள் இணைக்கின்றனர். இதனால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது என்ற எண்ணம், பெற்றோரிடம் ஏற்படுகிறது.
ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும், நர்சரி, துவக்க, நடுநிலை, உயர்நிலை கல்வி ஒரே கூரையின் கீழ் கிடைக்க வசதி செய்ய வேண்டும் என, கல்வி வல்லுனர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். இதை பரிசீலிக்க வேண்டும். கன்னடம் கல்வி மொழியாக, ஆங்கிலம் ஒரு பாடமாகவும் இருக்க வேண்டும்.
தங்கள் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளியில் படிக்க வைத்தால் மட்டுமே, சரியான கல்வி கிடைக்கும். வருங்காலத்தில் வேலை வாய்ப்புக்கு உதவியாக இருக்கும் என்ற மனபிரம்மையில் பெற்றோர் உள்ளனர். இவர்களுக்கு கன்னடத்தின் முக்கியத்துவம் குறித்து, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வாகனங்கள்
பேரூராட்சி, தாலுகா அளவிலும் ஆங்கில பள்ளி திறந்துள்ள தனியார் கல்வி நிறுவனங்கள், தங்களின் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வர, ஒவ்வொரு கிராமங்களுக்கும் வாகனங்களை அனுப்புகின்றனர்.
இச்சூழ்நிலையில், அரசு பள்ளிகளை காப்பாற்றுவது பெரிய சவாலாகும். அரசு பள்ளிகளை மேம்படுத்தும் பணியில், தனியார் தொழில் நிறுவனங்கள், பணக்கார வியாபாரிகள், வெளிநாடு வாழ் கன்னடர்கள், தொண்டு அமைப்புகள் கைகோர்க்க வேண்டும்.
அரசியல் பரபரப்பு மிகுந்த, சமூக ஒற்றுமை அடங்கிய, பொருளாதாரத்தில் வளமான, கலாச்சாரம், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதில் பெயர் பெற்ற மாவட்டம் மாண்டியா. இது அப்பட்டமான கன்னட மாவட்டம். இங்கு வேறு மொழியினர் ஆதிக்கம் குறைவு. விவசாயிகளின் மண்.
நான், கடந்த 1994ல் கன்னட சாஹித்ய பரிஷத் தலைவராக இருந்த போது, மாண்டியாவில் 63வது இலக்கிய மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வாய்ப்பு கிடைத்தது. 30 ஆண்டுகளுக்கு பின், எனக்கு மாநாட்டுக்கு தலைமை ஏற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை நான், என் பாக்கியமாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மூன்று நாட்கள் நடந்த கன்னட இலக்கிய மாநாடு நேற்று நிறைவடைந்தது. மூன்று நாட்களும் திரளான பொதுமக்கள், இலக்கியவாதிகள் பங்கேற்றனர். புத்தக மேளா, பொருட்காட்சி உட்பட, பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர். முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவு நாளான நேற்று முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், விவசாயத்துறை அமைச்சர் செலுவராய சாமி உட்பட பலர் பங்கேற்றனர். ஞாயிறு என்பதால், பெங்களூரு, துமகூரு, மைசூரு, ராம்நகர், கோலார், சிக்கபல்லாபூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கன்னட பிரியர்கள் வந்தனர்.
மாநாட்டில் கன்னட மொழியில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கீடு என, அரசுக்கு பல ஆலோசனைகள் கூறப்பட்டன. அடுத்த முறை பல்லாரியில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கன்னட மொழி வளர்ச்சி சட்டத்தை செயல்படுத்த, அரசை வலியுறுத்துவது; கன்னடர்களின் வேலை வாய்ப்புக்கு தடையாக, நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது; கன்னட பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து அரசை வலியுறுத்துவது; சரோஜினி மகிஷி அறிக்கையை செயல்படுத்துவது; ராஷ்டிர கவி விருது அறிவிக்க வேண்டுகோள் விடுப்பது என, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காலை சிற்றுண்டியாக தோசை, சட்னி, தக்காளி சாதம், கேரட் ஹல்வா, மதிய உணவுக்கு இனிப்பு போளி, நெய் சாதம், பருப்பு மசியல், பாதுஷா, களி உருண்டை, கீரை குழம்பு, சாதம், சாம்பார், தயிர், அப்பளம், சாலட், இரவு உணவுக்கு வெந்தய சாதம், தேங்காய் மிட்டாய், சாதம், ரசம், வாழைப்பழம், புரூட் சாலட் வழங்கப்பட்டன.
எதிர்ப்பையும் மீறி, முற்போக்கு சிந்தனையாளர்கள், மாநாட்டில் சிக்கன், கபாப், முட்டை, கோழி குழம்பு, கேழ்வரகு களி வழங்கினர். போலீசார் தடுத்தும் கேட்கவில்லை.

