ADDED : மார் 01, 2024 06:26 AM
பெங்களூரு: வர்த்தக கடைகளில் கன்னடத்தில் பெயர் பலகை வைக்க, அரசு கொடுத்த அவகாசம் நேற்று முன்தினத்துடன் முடிந்த நிலையில், மேலும் 15 நாட்களுக்கு அவகாசத்தை நீட்டித்து, துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டு உள்ளார்.
கர்நாடகாவில் வர்த்தக கடைகளில், ஆங்கிலத்தில் பெயர் பலகைகள் வைக்கப்படுவதற்கு, கன்னட அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
கன்னடத்தில் பெயர் பலகை வைக்க, கடைகளின் உரிமையாளர்களுக்கு, அரசு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து பிப்ரவரி 28ம் தேதிக்குள் வர்த்தக கடைகளில், கன்னடத்தில் பெயர் பலகை வைக்க, அரசு அவகாசம் கொடுத்தது.
இதற்கிடையில் கடந்த மாதம் கர்நாடகா ரக் ஷன வேதிகே அமைப்பினர் நடத்திய போராட்டத்தின்போது, சில கடைகளில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டு இருந்த, பெயர் பலகைகளை அடித்து உடைத்தனர்.
இதையடுத்து கடைகளில் கன்னட பெயர் பலகை வைக்க, உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அரசு கொடுத்த கெடு நேற்று முன்தினம் முடிந்த நிலையில், பெரும்பாலான கடைகளின் உரிமையாளர்கள், கன்னடத்தில் பெயர் பலகை வைக்கவில்லை.
இதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் தயார் ஆகினர்.
இந்நிலையில், கடைகளில் கன்னட பலகை பொருத்த, மேலும் 15 நாட்கள் அவகாசம் அளித்து, துணை முதல்வர் சிவகுமார் நேற்று உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கர்நாடகா ரக் ஷன வேதிகே தலைவர் நாராயண கவுடா கூறுகையில், ''பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத்திடம், நேற்று கூட பேசினேன்.
கடைகளில் கன்னடத்தில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது, நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் தற்போது பெயர் பலகை வைக்க அவகாசத்தை 15 நாட்கள் நீட்டித்து, துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டு உள்ளார். இப்படி கால கெடு நீடித்தால், யாரும் பலகை வைக்க மாட்டார்கள்.
''துணை முதல்வரின் உத்தரவு முட்டாள்தனம். வணிகர்களுக்கு, அரசும், மாநகராட்சியும் அடிபணியட்டும்.
நாங்கள் விட மாட்டோம். மேலும் 15 நாட்கள் பொறுத்து இருப்போம். அதன் பின்னரும் கடைகளில் ஆங்கில பலகை இருந்தாலும், கன்னட அமைப்பினர் அகற்றுவர்,'' என்றார்.

